search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Girl Child Day"

    • பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.
    • புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம்.

    புதுச்சேரி:

    பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை 2008-ம் ஆண்டு எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் தேசிய பெண் குழந்தைகள் தினமான இன்று தெலுங்கானா மாநில கவர்னரும் புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,

    பெண்ணினம் என்பது மெல்லினம் அல்ல வல்லினம் என்பதை இந்த சமூகம் நிரூபிப்பதற்கு அடித்தளமாக இந்த தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் உறுதியேற்போம்.

    பால் கொடுத்து வளர்க்கும் பெண் குழந்தைகள் பாலின தொந்தரவிற்கு ஆளாகாமல் பாதுகாப்பை இந்த சமூகம் வழங்க வேண்டுமென உறுதியேற்போம்.

    புதிய இந்தியாவை படைப்பதில் பெண்களின் பங்கு இருப்பதை உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

    • நாடு முழுவதும் பாலின பேதங்கள் இன்றி பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்
    • பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள் என்றார் பிரதமர் மோடி

    நாடு முழுவதும் சில தசாப்தங்களுக்கு முன் வரை குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது.

    இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது.

    இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

    மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர்.

    2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.


    பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.


    குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.


    இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, "பெண் குழந்தைகள்தான் மாற்றத்தை உருவாக்குபவர்கள்.பெண் குழந்தைகள் கல்வி கற்று, வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் தனது அரசு செய்து வருகிறது" என குறிப்பிட்டார்.

    2015ல் பிரதமர் நரேந்திர மோடி இதே தினத்தன்று, "பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள்; பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள்" ("பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ") என முன்னெடுத்த பிரசார திட்டங்கள் குறித்தும் இன்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது.

    • அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாடுகள் அங்கீகரிக்கிறோம்.
    • அவர்கள் நமது நாட்டையும், சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள்.

    புதுடெல்லி:

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-

    தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தையின் அசைக்க முடியாத மனப்பான்மை மற்றும் சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துகிறோம். அனைத்து துறைகளிலும் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தையின் வளமான திறனையும் நாடுகள் அங்கீகரிக்கிறோம். அவர்கள் நமது நாட்டையும், சமுதாயத்தையும் சிறந்ததாக மாற்றுபவர்கள். மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு பெண் குழந்தையும் கற்கவும், வளரவும், செழிக்கவும் நமது அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    • மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
    • பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ஊட்டி,

    ஆண்டுதோறும் ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஊட்டி ஊரகம் மற்றும் ஊரக மகளிர் போலீஸ் நிலையம் சார்பில், பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி எம்.பாலடாவில் நேற்று நடைபெற்றது. அங்கிருந்து பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊட்டி ஊரக போலீஸ் துணை சூப்பரண்டு விஜயலட்சுமி பேரணியை தொடங்கி வைத்து கூறுகையில், பெண் குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். இதில் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் பள்ளி மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். சமூக நலன் மகளிர் உரிமைகள் துறை சார்பில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடலூர் வருவாய் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. கூடலூர் ஆர்.டி.ஓ. முகமது குதரதுல்லா பெண் குழந்தைகளுக்கு தலையில் மலர் கிரீடம் அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான கையெழுத்து இயக்கத்தை ஆர்.டி.ஓ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் கோமதி, துணை தாசில்தார் சாந்தி, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பாளர் பார்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய சிறுமி ரக்‌ஷனாவுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு பத்திரத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    சென்னை:

    சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய சிறுமி ரக்‌ஷனாவுக்கு தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு பத்திரத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைக்கு 2018-ம் ஆண்டு முதல் தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழக அரசு மாநில விருதாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கி வருகிறது.

    இந்த ஆண்டு கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டி கிராமத்தைச் சேர்ந்த கே.ஆர்.ரக்‌ஷனா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கரூர் மாவட்டம் முழுவதும் நடுவதற்காக நன்கொடையாக வழங்கியதோடு, நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கண் தானம் செய்வதற்கு ஊக்குவித்தது, முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது, உலக வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது, மரங்களின் வேர்களுக்கு நேரடியாக தண்ணீர் பாய்ச்சும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது, பொருளாதார காரணத்தினால் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மூன்று மாணவர்களின் கல்வியை தொடர்வதற்காக தன் பெற்றோர் மூலமாக நிதியுதவி வழங்கியது போன்ற பணிகளை பாராட்டி, ரக்‌ஷனாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசின் விருதாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு பத்திரமும் வழங்கினார்.

    குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்தவும், பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் ‘‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’’ என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்தி திட்ட இலக்கை அடைந்ததற்காக, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டது.

    இதற்காக, தேசிய பெண் குழந்தைகள் தினமான கடந்த ஜனவரி 24-ந் தேதியன்று டெல்லியில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    மாவட்ட அளவில், திட்டம் சார்ந்த விழிப்புணர்வை பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சென்றடையும் வகையில் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்ததற்காக, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ‘‘மேம்பட்ட சமூகப் பங்கேற்பு’’ என்ற பிரிவின் கீழ் தேசிய விருது அந்த விழாவில் வழங்கப்பட்டது. இவ்விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ். கந்தசாமி காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணத்தை துணிச்சலுடன் போராடி நிறுத்தியதற்காக, 2018-ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் மாநில விருது பெற்ற நந்தினி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், ‘‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’’ திட்ட உள்ளூர் சாதனையாளராக அறிவிக்கப்பட்டார். அதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நந்தினி சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
    இன்று (ஜனவரி 24-ந் தேதி) தேசிய பெண் குழந்தைகள் தினம்.

    மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி. ஆண்டுதோறும் அடுக்கடுக்காக பல ‘தினங்கள்’ கொண்டாடப்பட்டு வந்தாலும், இதில் கவனிக்கத் தகுந்த தினமாக ஜனவரி 24-ந் தேதி தேசிய பெண்குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களைத் தாயாக, சகோதரியாக, அதற்கும் ஒருபடி மேலே போய்த் தெய்வமாகப் பார்க்கப் பண்படுத்தப்பட்ட சமூகம் நம்முடையது. ஆனால் இன்று பெண் குழந்தை என்றாலே முகம் சுழிக்கும் நிலை. கருவிலேயே பெண் குழந்தை என்று தெரிய வந்தால் அந்த பச்சிளம் கருவை கலைக்கும் படுபாதக சம்பவங்களும் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றன.

    இந்த இழி நிலையை மாற்ற வேண்டும் என்று சட்டங்கள் மூலம் தடுக்கப்பட்டு வந்தாலும் மூடத்தனமும், மூர்க்க குணமும் மாறியதாக தெரியவில்லை. எங்கே தடம் புரண்டோம்? எதனால் தடம் புரண்டோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்துப்பார்க்க வேண்டிய நேரம் இது.தமிழ்நாட்டில், மூட நம்பிக்கைகளைக் களைந்த தந்தை பெரியார் போட்ட பாதையில் பீடுநடைபோடுகிற பெண்கள் ஆண்களோடு ஒப்பிடுகையில் (ஆண்கள் 86.81 சதவீதம்) 73.86 சதவீதமெனில் ஏனைய மாநிலங்களைப்பற்றிக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

    இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் பெண்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்தான் எத்தனை? குழந்தை திருமண தடைச்சட்டம், சிறப்பு திருமண சட்டம், மண கொடை அல்லது வரதட்சணை தடைச்சட்டம், இந்திய விவாகரத்து சட்டம்-மகப்பேறு நன்மைகள் சட்டம், கருவுற்றிருத்தலை மருத்துவ முறையில் கலைப்பதற்கான தடுப்பு சட்டம், பணியிடங்களில் பெண்களை பாலியல் வன்கொடுமையில் இருந்து காக்கும் சட்டம், மகளிர் தம்மை இழிவுபடுத்தி காட்டுவதை (தடையுறுத்தும்) சட்டம், தேசிய பெண்கள் ஆணைய சட்டம், சமமான பணி ஊதிய சட்டம்-இத்தனை சட்டங்களுக்குமான தேவை இருப்பதே பெண் குழந்தைகளின் மீதான மக்களின் கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது இல்லையா?

    பெண் இன்றளவும் மண்ணோடும் பொன்னோடும் சேர்ந்த போகப் பொருளாகப் பார்க்கப்படுகிறாள் எனில் நம் சமூகம் கல்வியறிவு பெற்றதனால் பயன் என்ன? ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் வளர்க்கப்படுகையில் ஆணுக்கான முக்கியத்துவம் இன்றும் அதே அளவுதான் உள்ளது. தரமான கல்வி உள்பட எவ்வளவுதான் பெண்கள் படித்து முன்னேறினாலும் கூட மிக எளிதாக அவளது வளர்ச்சியைக் கொச்சைப்படுத்த முடிகிற சமூகம் இன்னும் தேவையா? என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

    பாரதி சொல்வான், “கற்பு நெறியென்று சொல்லவந்தால் இருகட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று. ஒழுக்க நெறிஎன்பது ஆண்,பெண் இருபாலருக்கும் முக்கியம். பெண்ணைத் தெய்வமாக்க வேண்டியதில்லை. சக மனுஷியாகப் பார்க்கும் பார்வையை ஆண்கள் பெற வேண்டும்.

    குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் கூட நடை பெறுவதைச் சட்டம் போட்டே தடுத்துக் கொண்டிருக்கிறோம். மாற்றம் மனதில் வர வேண்டும். பெண் மீதான பாலியல் வன் கொடுமைகள் கட்டவிழ்க்கப்படுவதில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆக்கப் பூர்வமான செயல்களுக்கு உதவுவதைவிட பெண்ணை நுகர்வுப் பண்டமாக மாற்றுவதற்கே அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான உண்மை.

    எதற்காக இத்தினம் 2008 ஜனவரி 24-ல் இருந்து கொண்டாடப்படுகிறது தெரியுமா? பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பும், அங்கீகாரமும் கிடைக்கப்பெறுவதற்கு. அப்படியென்றால் இதுவரை அப்படி இல்லையா? என்று கேட்டால் “இல்லை” என்பதே பதிலாக இருக்கும். இது வருந்தத்தக்க உண்மை. எட்டும் அறிவினில் ஆணுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று அனைத்து துறையிலும் கொடிகட்டி பறக்கின்றனர்.

    பெண் குழந்தைகள் உறவுகளின் மூல உற்று. இல்லறத் தேரின் அச்சாணி. தொட்டில் தேவதைகள். அவர்களை போற்றி கொண்டாடவேண்டும். பெண் நுகர்வுப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட்டால் அது எந்தக் காலத்திலும் மாறாது என்பதைக் கருத்தில் கொண்டு அவளைத் தோழியாக, மனைவியாகத், தாயாக, சுருங்கச் சொல்வதெனில் சக மனுஷியாக பார்க்கக் கற்றுக்கொள்வோம். கற்றுக் கொடுப்போம். பெண் ஓர் ஆணிடம் வேண்டுவது வேறெதையும் அல்ல. மரியாதையை மட்டுமே.

    வே.வனிதா, டி.ஐ.ஜி, வேலூர் சரகம்.
    ×