என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "palayamkottai jail"
- ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- 2 கைதிகளும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகளுக்கும், விசாரணை கைதிகளுக்கும் சிறைத்துறை சார்பில் சில சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சில கைதிகளின் பழக்க வழக்கத்தை பொறுத்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் பீடி கட்டுகள் வழங்கப்படுவது வழக்கம்.
கைதிகளின் உறவினர்கள் அவர்களை பார்க்க வரும்போது அவர்களுக்கு தின்பண்டங்கள், பீடி உள்ளிட்டவை கொண்டு வந்து கொடுத்து வந்த நிலையில், அதனால் சில விபரீதங்கள் ஏற்பட்டதன் காரணமாக மத்திய சிறைகளில் சிறைத்துறை சார்பில் சிறிய அங்காடிகள் ஏற்படுத்தப்பட்டு பீடி உள்ளிட்டவை கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாளை மத்தியச்சிறையில் சுமார் 1,100 கைதிகள் விசாரணைக்காகவும், தண்டனை பெற்றும் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிறை கைதிகளில் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்காக பீடி வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் 10 எண்ணம் கொண்ட பீடி கட்டு ஒரு கைதிக்கு ஒரு வாரத்திற்கு 2 கட்டு மட்டுமே வழங்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2 கட்டுகள் மட்டும் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என்று சிறை வார்டன்கள் அங்கிருக்கும் கைதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் திடீரென்று பீடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் வாரத்திற்கு 2 பீடி கட்டுகள் தான் கொடுப்பீர்களா என்று கேட்டு மனம் உடைந்து போன 2 விசாரணை கைதிகள் நேற்று பாளை மத்திய சிறையில் தங்களது அறையில் இரும்பு துண்டு மூலம் கைகளை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதுகுறித்து அறிந்த சிறை வார்டன் உடனடியாக அந்த 2 கைதிகளையும் மத்திய சிறையின் உள்ளே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கையை அறுத்துக்கொண்ட கைதிகள் பாளை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்தையா, கோவில்பட்டி கிழக்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும், இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி, குமரியில் கடந்த 2022-ம் ஆண்டு வெவ்வேறு வழக்குகளில் கைதாகி கடந்த ஜூலை மாதம் முதல் பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
- கைதிகள் பகுதி மற்றும் உறவினர்கள் பகுதிகளில் தலா 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை:
பாளை மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதியாக சுமார் 1353-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
சிறையில் இருக்கும் இந்த கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளை தவிர 5 நாட்கள் அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்போது கைதிகள் ஒரு புறமும், அவர்களது உறவினர்கள், வக்கீல்கள் மற்றொரு புறமும் நின்று பேசுவார்கள். அதில் அவர்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால், இருதரப்பினரும் அதிக சத்தத்துடன் பேசுவார்கள். இதனால் சரியாக கேட்கமுடிவதில்லை என்று கைதிகளின் உறவினர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி பேசும் நிலை இருந்தது.
எனவே கம்பி வலையின் உள்ளே நின்று கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்தபடி போனில் பேசும் வகையில் பாளை மத்திய சிறையில் இன்டர்காம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக கைதிகள் பகுதி மற்றும் உறவினர்கள் பகுதிகளில் தலா 26 இன்டர்காம் இணைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே கண்ணாடி அறை போன்று உருவாக்கப்பட்டு, சி.சி.டி.வி. கேமிராக்களும் கண்காணிப்பு பணிக்காக பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த அறையானது இன்று காலை திறக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கலந்து கொண்டு அறையை திறந்து வைத்து, இன்டர்காம் வசதியை தொடங்கி வைத்தார். கூடுதல் சிறை சூப்பிரண்டு வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம் இனி சத்தமாக பேச வேண்டிய தேவை இருக்காது. கைதிகள் தங்களது உறவினர்களிடம் தெளிவாக பேசலாம். தமிழகத்தில் சென்னை புழல், கோவை, வேலூர், மதுரை மத்திய சிறைகளை தொடர்ந்து நெல்லை மத்திய சிறைக்கு இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் வடக்கு மெயின் ரோட்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் வெளியூரை சேர்ந்த மாணவ மாணவிகள் அருகில் உள்ள தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கியிருந்து பள்ளிக்கு வந்து செல்கிறார்கள்.
இந்த பள்ளியில் நாகர் கோவிலை சேர்ந்த டேவிட் (வயது 52) என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வள்ளியூர் லுத்தா நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆசிரியர் டேவிட் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவிக்க பயந்து, ஆசிரியர் டேவிட் செயலை கண்டும் காணாமல் இருந்து வந்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர் அந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தேவ் ஆனந்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். விசாரணையில், ஆசிரியர் டேவிட் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் சார்பில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் டேவிட்டை கைது செய்தனர்.
பின்னர் அவர் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாளை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என சுமார் 1500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் செல்போன் போன்றவைகள் உள்ளதா? என்று அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள்.
அதுபோல இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் நெல்லை மாநகர போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சாம்சன் மேற்பார்வையில் பாளை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 60 போலீசார் அடங்கிய தனிக்குழுவினர் அதிகாலை 5 மணியளவில் பாளை மத்திய ஜெயிலுக்குள் சென்றனர்.
அங்கு அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினார்கள். கைதிகள் குளிக்கும் பகுதி, மணல் பாங்கான மைதானம் மற்றும் மரங்கள் பகுதியில் சல்லடை போட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது மத்திய ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து காலை 7 மணி அளவில் போலீசார் சோதனையை முடித்து கொண்டு திரும்பினர்.
இந்த சம்பவத்தை முன்னிட்டு பாளை மத்திய ஜெயில் பகுதியில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 27), கூலித் தொழிலாளி. இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஆனந்தி, தனது குழந்தையுடன் சீதபற்பநல்லூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இசக்கிமுத்து சீதபற்பநல்லூருக்கு சென்று குழந்தையை பார்த்தார். அப்போது, குழந்தையுடன் உடனடியாக வீட்டிற்கு வரும்படி ஆனந்தியிடம் இசக்கிமுத்து கூறினார். இதற்கு மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி இரவில் சீதபற்பநல்லூருக்கு இசக்கிமுத்து மீண்டும் சென்றார். இரவில் அங்கு தங்கினார். மறுநாள் காலையில் தூங்கி எழுந்த ஆனந்தி, தனது அருகில் படுத்து இருந்த குழந்தையையும், கணவர் இசக்கி முத்துவையும் காணாமல் அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து சீதபற்பநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது குழந்தையை குளத்தில் கல்லை கட்டி வீசிக் கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் சிறை அறையில் இருந்து கைதிகள் திறந்து விடப்பட்டனர். அறையில் இருந்து வெளியே வந்த இசக்கிமுத்து, சிறை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தனது டவலை கிழித்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மரத்தில் இசக்கிமுத்து பிணமாக தொங்கியதை பார்த்த மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், ஜெயிலர் தர்மலிங்கம் ஆகியோர் விரைந்து சென்றனர்.
இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து இசக்கிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இசக்கிமுத்து கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாருடனும் பேசாமல் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். இதனால் அவர் மனஉளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று நெல்லை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதில் இசக்கிமுத்து தற்கொலை குறித்து யாரும் சந்தேகம் எழுப்பவில்லை. இதனால் இன்று அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 27). கூலித் தொழிலாளியான இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஆனந்திக்கு சில நாட்களுக்கு முன்பு நடுக்கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, கடந்த வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து குழந்தையை பார்க்க சென்ற இசக்கிமுத்து, குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது இசக்கிமுத்து குடிபோதையில் இருந்ததால், மாமியார் முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இசக்கிமுத்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து சீதபற்பநல்லூரில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்று தங்கியுள்ளார். அதிகாலையில் ஆனந்தி எழுந்து பார்த்தபோது, தொட்டிலில் இருந்த குழந்தையையும், இசக்கிமுத்துவையும் காணவில்லை.
இது குறித்து ஆனந்தி புகாரின்பேரில் சீதபற்பநல்லூர் போலீசார் இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் குழந்தையை இசக்கிமுத்து இரவில் தூக்கிச் சென்று சீதபற்பநல்லூரில் உள்ள குளத்தில் வீசி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை வீசிய இடத்தை இசக்கிமுத்து அடையாளம் காட்டவே, அங்கு தண்ணீருக்குள் கிடந்த குழந்தையின் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். இசக்கிமுத்துவை சிறையில் அடைத்த நாள் முதல் அவர் மனநிலை சரி இல்லாதவர் போல் சிறை வளாகத்தில் சுற்றி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை சிறை வளாகத்தில் இசக்கிமுத்து நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த டவலால் அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற சிறைத்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர்.
இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை வளாகத்தில் கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாளை மத்திய ஜெயிலில் 1,300-க்கும் அதிகமான தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு முன்பு கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டதால் பல்வேறு பிளாக்குகளாக பிரித்து கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் உள்ளதா என்றும் அவ்வப்போது போலீசார் சோதனை நடத்துவார்கள். அதுபோல இன்று பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திர குமார் ரத்தோட் உத்தரவிட்டார்.
துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் பாளை உதவி கமிஷனர் சக்கரவர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் காளியப்பன், தில்லை நாகராஜன் மற்றும் 70-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மத்திய ஜெயிலுக்குள் அதிரடியாக நுழைந்தார்கள்.
7 பிரிவுகளாக பிரிந்து சென்ற அவர்கள் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகள், குளியலறைகள், சமையலறை, மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினார்கள். சந்தேகப்பட்ட தரை பகுதிகளில் தோண்டி பார்த்தும் சோதனை நடந்தது.
போதை பொருட்கள், செல்போன் போன்றவைகள் ஏதேனும் உள்ளதா? என்று சில கைதிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இன்று காலை 7.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் இந்த அதிரடி சோதனை நடந்தது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
சோதனையின் போது பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் ஜெயில் அதிகாரிகளும் உடன் சென்றனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளை மத்திய சிறையில் இருந்து ஏற்கனவே 6 கட்டமாக 41 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாளை ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் கைதிகளின் நன்னடத்தைகளை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதையடுத்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி மேலும் 44 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் 17-ந் தேதி 23 கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து 180 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் பாளை சிறையில் இருந்து மேலும் 58 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இதுவரை பாளை மத்திய சிறையில் இருந்து 238 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் பொய்யாங்குளத்தை சேர்ந்தவர் தியாகு என்கிற தியாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தியாகராஜன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சின்ன காஞ்சீபுரத்தில் உள்ள யதோகதகாரி கோவிலுக்கு சொந்தமான இடம் காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் உள்ளது. இதில் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர்.
இதில் அதே பகுதியைச் சேர்ந்த ரகுநாதன் (43) என்பவர் கடை வைத்திருந்தார். அவர் வாடகை பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே கோவில் தர்மகர்த்தா நாராயணன் என்பவர் வாடகை பாக்கி வைத்திருந்த வியாபாரிகளை கடைகளை காலி செய்யுமாறு கூறினார்.
இதற்காக ரவுடி தியாகராஜனின் உதவியை நாடினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் தர்ம கர்த்தா நாராயணன் மற்றும் காஞ்சீபுரம் ரவுடி தியாகராஜனின் தாய் பவானி ஆகியோர் கடைக்கு சென்று ரகுநாதனை மிரட்டினர். அப்போது செல்போனில் தொடர்பு கொண்டு ரவுடி தியாகராஜன் ரகுநாதனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி நேற்று முன்தினம் சின்ன காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் ரகுநாதன் புகார் அளித்தார். இதன் பின்னர் ஆட்டோவில் வீடு திரும்பிய ரகு நாதனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் கோவில் தர்மகர்த்தா நாராயணனை 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் ரகுநாதனை வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி தியாகராஜன் மிரட்டியது தெரியவந்தது. இது குறித்து வேலூர் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தியாகராஜன் அடைக்கப்பட்டுள்ள அறையில் அதிரடி சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர். நேற்று நள்ளிரவு பாகாயம் போலீசார் ஜெயிலுக்குள் சென்று தியாகராஜன் அறையில் சோதனை செய்தனர். அங்கிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த போனில் இருந்து தான் வியாபாரியை மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் மீது பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து ரவுடி தியாகராஜன் பாளையங்கோட்டை ஜெயிலுக்கு இன்று மாற்றப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்