search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police explain"

    சபரிமலைக்கு செல்ல முயன்ற இளம்பெண்கள் 6 பேரை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். #Sabarimala #AyyappaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

    சபரிமலை கோவில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார். தந்திரி கண்டரருராஜீவரு உடன் இருந்தார். நேற்று சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

    நேற்று ஒரே நாளில் 20 ஆயிரம் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 3 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. இன்றும் சாமி தரிசனம் செய்ய சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.



    வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு தங்க ஆபரணங்களில் ஜொலிக்கும் சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜை நடைபெறும். அதே சமயம் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இந்த நிலையில் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற 2 இளம்பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய சம்பவமும் நடந்து உள்ளது.

    விசாகபட்டினத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய பம்பை வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் வயதில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது ஆதார் அட்டையை போலீசார் சரி பார்த்தனர். அப்போது அதில் அவருக்கு 49 வயது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பெண் தனக்கு 50 வயது ஆகிவிட்டதாகவும் ஆதாரில் தவறாக வயது குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால் அந்த பெண் சாமி தரிசனத்திற்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அவருக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார்கள். இதே போல கர்நாடகாவில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் குழுவில் இடம் பெற்ற ஒரு பெண்ணுக்கு 30 வயதுதான் ஆகியிருந்தது. அவர் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு சென்றால் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்துவார்கள் என்பதால் அந்த பெண்ணுக்கும் அறிவுரை வழங்கி அவரை திருப்பி அனுப்பினார்கள்.

    இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழுவினர் இன்று காலை சபரிமலை செல்வதற்காக வந்தனர். அந்த குழுவில் 50 வயதிற்கு உட்பட்ட 4 இளம்பெண்களும் இருந்தனர். அவர்களை நிலக்கல்லில் தடுத்து நிறுத்திய போலீசார் இளம்பெண்கள் சபரிமலை சென்றால் ஏற்படும் பிரச்சினையை எடுத்துக்கூறினார்கள்.

    அதற்கு அந்த இளம்பெண்கள் தாங்கள் பம்பை வரை மட்டும் செல்ல திட்டமிட்டுள்ளதாக போலீசாரிடம் கூறினார்கள். அதே சமயம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது சபரிமலை செல்லப் போவதாக மாற்றிக் கூறினார்கள்.

    போலீசாரின் அறிவுரையை ஏற்று 4 பெண்களும் சபரிமலை செல்லும் திட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.  #Sabarimala #AyyappaTemple
    ×