search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "separate law"

    • தமிழ்நாட்டில் நில அபகரிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
    • இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தப்பட்டது.

    ராஜபாளையம்

    தமிழ்நாட்டில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாக சிறப்பு போலீஸ் பிரிவை ஏற்படுத்த கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

    தனி சட்டமோ, தனி நீதிமன்றமோ, தனி விசாரணை அமைப்போ ஏற்படுத்துவதற்கு முறையான சட்டமன்ற மசோதா தாக்கல் செய்து சட்டம் இயற்ற வேண்டும். ஒரு அரசாணை மூலம் அதை செயல்படுத்த முடியாது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் சென்னை ஐகோர்ட்டை வழக்கு தொடர்ந்தார்.

    இதை விசாரித்த ஐகோர்ட்டு இந்த அரசாணை தவறு. இதை தவறாக பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளது. நில மோசடி குறித்து விசாரிக்க இந்திய தண்டனை சட்டம், சொத்து மாற்று சட்டம் என ஏற்கனவே சட்டங்கள் உள்ளன. தனியாக அரசாணை மூலம் தனிப்பிரிவு அமைத்து தனி நீதிமன்றம் அமைக்க அவசியமில்லை என்று கூறி அரசாணையை ரத்து செய்தது.

    சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த நிலையில் ஈரோட்டை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர், தனது நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நீண்டநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அவருக்காக சுப்ரீம் கோர்ட்டு வக்கீலான ராஜபாளையத்தை சேர்ந்த ராம்சங்கர் ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்து வாதிட்டார். தமிழகத்தில் 23 மாவட்டங்களில் சுமார் 3 ஆயிரம் முதல் தகவல் அறிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனை சிலர் தவறாக பயன்படுத்து கின்றனர்.

    கணவர் சொத்தை மனைவி விற்றுவிட்டார் என்பதற்காக நில அபகரிப்பு சட்டம் மூலம் வழக்கு தாக்கல் செய்து அதை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கிறார்கள் என்று ஆதாரங்களுடன் முறை யிட்டார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் ஆஜரானார்.

    இந்த 2 வழக்குகளையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு தீர்ப்பை வழங்கியது.

    அதில் 2 நபர்களுக்கு இடையிலான தனிப்பட்ட நில பிரச்சினைகளில் அரசின் தலையீடு என்பது வேதனைக்குரியது. மேலும் தமிழகத்தில் நிலப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

    குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு உள்ளிட்ட விவ காரங்களில் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

    தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும் என திருமுருகன் காந்தி கூறியுள்ளார். #ThirumuruganGandhi #May17
    நெல்லை:

    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பியுள்ளது. ஆனால் கவர்னர் அதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    மாநிலங்களுக்கு கவர்னர் பதவி தேவையில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை கொண்டு வரவேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு முறையான உதவி செய்யவில்லை. மத்திய அரசிடம் இழப்பீட்டு தொகையை குறைவாக கேட்டுள்ளது.

    மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் ஒரு தென்னைக்கு ரூ.50 ஆயிரம் நிதி கணக்கிட்டு கொடுக்கப்போவதாக முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கணக்கிட்டால் கஜா புயலில் முறிந்து விழுந்த தென்னை மரங்களுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். தோராயமாக டெல்டா மாவட்டங்கள் ரூ.80 ஆயிரம் கோடிக்கு சேதமடைந்துள்ளது. எனவே மாநில அரசு மத்திய அரசிடம் கூடுதலாக நிதி கேட்கவேண்டும்.

    தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவே போலீசார் செயல்பட்டு வருகின்றனர். அங்கு ஆலைக்கு எதிராக போராடுபவர்களுக்கு தங்கும் விடுதி அறைகள் கொடுக்கக்கூடாது என போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.



    எங்கள் அமைப்பு சார்பாக எந்த போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு போலீசார் அனுமதி கொடுப்பதில்லை. நீதிமன்ற அனுமதி பெற்றே பொதுகூட்டம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கிறது.

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு பா.ஜ.க. சொல்படியே செயல்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. தோல்விகளுக்கு பிறகாவது தன் நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். இல்லையெனில் தேர்தலில் மிக மோசமான நிலையை அடையும்.

    மேகதாது அணை பிரச்சினையில் மத்திய பா.ஜ.க. அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் தமிழகத்திற்கு எதிரான நிலையை எடுத்து வருகிறார்கள். காவிரி படுகையில் மீத்தேன் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுப்பதற்காக காவிரி பாசன பகுதியை மத்திய அரசு வேண்டும் என்றே வறண்ட பூமியாக்க முயற்சிக்கிறது.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி திருச்சியில் பெரியார் நினைவு தின கருப்பு சட்டை பேரணி நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாகி புருஷோத்தமன் உடனிருந்தார். #ThirumuruganGandhi #May17
    பசு பாதுகாவலர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க தனிச் சட்டம் இயற்றவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது.
    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் செயல்படும் சில வன்முறைக் கும்பல் மாட்டிறைச்சி சாப்பிடும் அப்பாவி மக்களை குறி வைத்து கடுமையாக தாக்குவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது. இவர்கள் பலரை அடித்துக் கொன்றும் உள்ளனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இப்படி வன்முறைக் கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்தகைய தாக்குதல்களை தடுக்க தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறை களை பிறப்பிக்கவேண்டும் என்று கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மகாத்மா காந்தியின் கொள்ளுபேரன் து‌ஷார் காந்தி உள்பட பலர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியதாவது:-

    பசு பாதுகாவலர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது. திரளானவர்கள் ஒன்று கூடி அப்பாவி மக்கள் மீது பயங்கரமாக தாக்குதல் நடத்துவது புதிய சட்டவழி முறையாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

    இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, தீர்வு காணும் முறைகள், தகுந்த தண்டனை ஆகியவற்றை மேற்கொள்ளவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுகிறோம்.

    இதை மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் செயல்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். எந்த மாநில அரசும் இந்த வி‌ஷயத்தை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடக் கூடாது. யாராவது அராஜகத்தில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனென்றால் எந்த வகையிலும் வன்முறையை அனுமதிக்க இயலாது. தனி நபர்கள் யாரும் சட்டத்தின் காவலர்களாக ஆகி விடவும் கூடாது.

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துபவர்கள் மற்றும் கொலை செய்யபவர்களை தண்டிக்கவும், அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவும் தனிச் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    பின்னர் வழக்கு விசாரணையை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 28-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

    இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனைத்து மாநில அரசுகளுக்கும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் அப்பாவி மக்களை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது, நினைவு கூரத்தக்கது.  #Tamilnews #CowVigilantism #SupremeCourt
    ×