search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடிமருந்து தொழிற்சாலை"

    • எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐவர் மலை பழனியின் அடையாளங்களில் ஒன்றாகும்.
    • ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்பு போன்று மிகப்பெரிய போராட்டம் பழனி நகரிலும் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    பழனி:

    வெண்முகில் இறங்கிய மலை உச்சியிலிருந்து மழைநீர் வழியும் அழகு ஐவர் மலைக்கு உரியது. எந்த திசையில் இருந்து பார்த்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் ஐவர் மலை பழனியின் அடையாளங்களில் ஒன்றாகும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு சமணப்பள்ளி இருந்த இடம் இது.

    5 தீர்த்தங்கரர்கள் வாழ்ந்த இடம் என்பதால் ஐவர் மலை என பெயர் பெற்றது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் மலை மீது முருகனும், விநாயகரும், திரவுபதியும் மக்களின் வழிபாட்டு கடவுள்களாக இருந்து வருகின்றனர். நீண்டகாலமாக ராமலிங்க அடிகளாரின் தொண்டர்கள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை எனும் அமைப்பை நடத்தி வருகிறார்கள்.

    ஐவர் மலைக்கும் அதற்கு நேர் எதிர்புறம் உள்ள துரியோதனன் மலைக்கும் இடையே செல்லும் ராஜபாட்டை பன்னெடுங்காலமாக உள்ளது. முன்னொரு காலத்தில் ஐவர் மலைக்கு மேற்குப் பக்கம் உள்ள கொழுமம் சர்வதேச சந்தையாக இருந்தது. கடல் மார்க்கமாக கப்பல்கள் மூலம் கேரளா வழியாக வரும் வெளிநாட்டு வணிகர்களுக்கான பொருட்கள் உள்நாட்டிலிருந்து ராஜபாட்டை வழியாக வண்டிகளில் கொண்டு செல்லப்படும். 2 மலைகளைச் சுற்றிலும் தொல்குடி மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

    ஐவர் மலையைச் சுற்றிலும் விவசாய பூமிகள் நிறைந்துள்ளன. விவசாயத்தை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான குடிமக்கள் அமைதியான சுற்றுச்சூழலுடன் நிம்மதியாகவும் பாதுகாப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பழனி கொழுமம் ரோட்டிற்கு தெற்குப் பக்கம் நவீன ராட்சத செங்கற்சூளைகள் நிரம்பி வழிகிறது. தற்போது ரோட்டிற்கு வடக்குப் பக்கம் 250 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய வெடிமருந்து தொழிற்சாலை அமைவதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகிறது. அதுவும் ஐவர் மலையை ஒட்டி அமைக்கப்படுகிறது. நிலத்தடி நீரும் தூய காற்றும் மாசு படும். மனிதர்களும் விலங்குகளும் பல்லுயிரிகளும் புல் பூண்டுகளும் வாழத் தகுதியற்ற பாலை நிலமாக மாறிவிடும். விபத்து ஏற்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும்.

    கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பழனி சட்டமன்ற உறுப்பினர் வெடி மருந்து தொழிற்சாலை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என பாப்பம்பட்டி மக்கள் மத்தியில் உறுதியளித்தார். ஆனால் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

    அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துக்களைக் கூட அறியாமல் மாவட்ட நிர்வாகம் வெடிமருந்து தொழிற்சாலை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளது என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    வெடிமருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை மூடி மறைத்து ஏற்றிக்கொண்டு வரிசையாக லாரிகள் ஐவர் மலையைச் சுற்றிலும் வலம் வருகின்றன. ஒரு கார்ப்பரேட் கம்பெனி முதலாளிக்காக பழனி வேட்டைப்பகுதியாக மாறி விடுமோ என்ற அச்சத்திலும் பீதியிலும் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.

    இது குறித்து பழனி முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ராஜமாணிக்கம் தெரிவிக்கையில்,

    சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழக அரசு அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது. அதனால் தான் ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் கடுமை காட்டியது. தொன்மையையும் பழமையையும் பண்பாட்டு கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு நல்ல காற்றையும் நிலத்தடி நீரையும் இழந்து விட்டு நடைப்பிணங்களாக வாழும் நிலை ஏற்படுமோ? என்ற அச்சம் பழனி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    வடமாநிலத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் முதலாளியின் சுயநலத்திற்கும் சொகுசு வாழ்க்கைக்கும் இப்பகுதி மக்கள் இரையாகிவிடுவோமோ? என்று அச்சம் அடைந்துள்ளனர்.

    தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு வெடிமருந்து தொழிற்சாலை பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஸ்டெர்லைட், மீத்தேன் எதிர்ப்பு போன்று மிகப்பெரிய போராட்டம் பழனி நகரிலும் வெடிக்கும் சூழல் உள்ளது என்றார்.

    ×