search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகிலத்திரட்டு அம்மானை"

    • ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
    • மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.

    ''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே

    அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''

    அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.

    இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.

    அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.

    நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.

    படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.

    கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.

    எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.

    இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.

    அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.

    அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.

    இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.

    அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.

    இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.

    அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.

    அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.

    (இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.

    இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.

    ×