search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "250 வாலிபர்"

    • தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்திருக்கிறது
    • பெண்கள் மூலம் பேசியதும் அம்பலம்

    நாகர்கோவில்:

    வெளிநாட்டு வேலை என்ற மோகத்தில் நாடு முழுவதும் பலர் பணத்தை இழந்து வருவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் சிலர் ஏஜண்டுகளை நம்பி பணத்தை இழந்து தான் வருகின்றனர்.

    அப்படி ஒரு சம்பவம் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை, கருங்கல், மார்த்தாண்டம், அஞ்சுகிராமம், ஜேம்ஸ்டவுன் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலரை தொடர்பு கொண்ட ஏஜண்டுகள், ஆஸ்திரேலியாவில் வேலை இருப்பதாக கூறி உள்ளனர். இதனை நம்பிய இளைஞர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், சென்னையில் மருத்துவ பரிசோதனைக்கும் ஏஜண்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர்.

    விரைவில் வேலைக்கான உத்தரவு, விசா போன்றவை வந்து விடும் எனக் கூறி ஒவ்வொரு இளைஞரிடமும் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஏஜண்டுகள் வசூலித்துள்ளனர்.

    ஆனால் நாட்கள், மாதங்கள், வருடங்கள் கடந்தும் எந்தவித விசாவும் வராத நிலையில் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை இளைஞர்கள் உணர்ந்தனர்.இதனை தொடர்ந்து அவர்கள், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, அவ்வப்போது தங்கள் செல்போனில் ஏஜண்டு தரப்பில் யாராவது பெண்கள் பேசி, கண்டிப்பாக விசா வந்து விடும் என நம்பிக்கை தெரிவித்ததாகவும் இதனை நம்பி காத்திருந்ததாகவும் ஏமாந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    மேலும் ஒரு கட்டத்தில், பணிக்கான விசா கிடைக்க வில்லை. எனவே சுற்றுலா விசாவில் உங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் பணிக்கான விசா வாங்கி தருகிறோம் என்றும் மோசடி கும்பல் உறுதியளித்தனர்.

    இந்தக் கும்பல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இதுபோல மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம். குறைந்தது 250 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு விசாரணைக்கு வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

    இதன்மூலம் மோசடிக் கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். 

    ×