search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளவங்கோடு தாலுகா பாசனம்"

    • மத்திய மந்திரியிடம், விஜய்வசந்த் எம்.பி. மனு
    • 2004-ம் ஆண்டு வரையில் கேரள அரசு தண்ணீர் வழங்கி வந்தது.

    நாகர்கோவில்:

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை விஜய்வசந்த் எம்.பி. நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் 9,200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். ரப்பர் விவசாயம் இங்கு அதிகமாக காணப்படுகிறது. கடந்த 2004-ம் ஆண்டு வரையில் நெய்யாறு அணைக்கட்டில் இருந்து இடதுகரை கால்வாய் வழியாக பாசனத்துக்கு கேரள அரசு தண்ணீர் வழங்கி வந்தது.

    தற்போது அந்த கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதை கேரள அரசு திடீரென நிறுத்தி உள்ளது. 1956-ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது அன்று கேரளாவுடன் இருந்த விளவங்கோடு தாலுகாவுக்கு பாசனத்துக்கு நெய்யாறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என கேரள அரசு உறுதியளித்து இருந்தது. 22 கிலோ மீட்டர் கொண்ட இந்த கால்வாய் வழியாக பெறப்படும் தண்ணீர் விளவங்கோடு தாலுகாவுக்குட்பட்ட 9 பஞ்சாயத்து நிலங்களை வளப்படுத்தி வந்தன.

    நெய்யாறு ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி தமிழ்நாட்டில் அமைந் துள்ளது. மத்திய நீர்வள ஆணையம் இதை இருமாநிலங்களுக்கு இடையேயான நதி என்று அங்கீகரித்துள்ளது. ஆனால், கேரள அரசு இதை தங்கள் மாநிலத்திற்கு மட்டுமே சொந்தமான நதி என்று கூறி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல குழுக்கள் அமைத்து பலமுறை கேரள அரசை தொடர்பு கொண்டு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டது.

    ஆனால், கேரள அரசின் பிடிவாத போக்கால் இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. எனவே, விளவங்கோடு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நெய்யாறு இடதுகரை கால்வாய் வழியாக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட கேரள அரசை அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×