search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்கோ தொழிற்பேட்டை"

    • மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அழகாபுரி சாலையில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் சிவ காசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் கவர் பிரிண்டிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு 15-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்நிலையில் செயல்பாட்டில் இருந்த ஒரு எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது. அந்த எந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரும், மற்ற தொழிலாளர்களும் தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் தப்பி வெளியேறினர். பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் அருகில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற் சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் பிரிண்டிங் எந்திரம், பாலித்தீன் கவர் ரோல்கள் மற்றும் பிரிண்டிங் மை கேன்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

    இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×