search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லட்சம் மோசடி"

    • எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பரபரப்பு புகார்
    • ரூ.30 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் லோன் கிடைக்கும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலஞ்சியை சேர்ந்த மேரி ஸ்டெல்லா என்பவர் தலைமையில் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், சங்கம் மூலமாக லோன் தருவதாக எங்களிடம் கூறினார். ரூ.30 ஆயிரம் முன் பணம் செலுத்தினால் ரூ.3 லட்சம் லோன் கிடைக்கும் என்றும், அதில் பாதி பணம் தள்ளுபடி ஆகும் என்றும் அந்த பெண் தெரிவித்தார். மேலும் அந்த பெண்ணின் கணவர் காவல்துறையில் பணியாற்றி இறந்து விட்ட தாகவும் கூறினார்.

    இந்த நிலையில் அந்த பெண் கூறியதை நம்பி குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த வகையில் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்த பணத்தை சம்பந்தப்பட்ட பெண் பல முறை நேரில் வந்து வாங்கி சென்றார். மேலும் நெல்லை மாவட்டத்துக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்ட சங்க அலுவலகத்தில் வைத்தும் பணம் வாங்கினர்.

    ஆனால் முன் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் கெடுக்காததால் கட்டிய பணத்தை நாங்கள் திருப்பி கேட்டோம். அப்போது டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்று எங்களிடம் கூறினர். பின்னர் கொரோனா பிரச்சினை முடிந்து கடந்த ஒரு ஆண்டாக சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகியை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து நேரில் சென்று பார்த்த போது சம்பந்தப்பட்ட நபர் பணமே வாங்காதது போல எங்களிடம் பேசியதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்று தரவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். எஸ்.பி. அலுவலகத்தில் ஏராளமானோர் திரண்டு மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

    ×