search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சங்கரநாராயணர்"

    • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
    • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

    மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

    இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

    தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

    • ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
    • தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.

    கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

    அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

    ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

    3-டி அமைப்பில் ஓவியம்

    கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.

    • இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள்.
    • தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள்.

    அரியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய ஸ்ரீகோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

    திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோவில் பிராகாரத்தில் படுத்துக்கொள்வார்கள். இரவு நமக்கே தெரியாமல், அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றனர் பக்தர்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை.
    • சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் வேறு எந்த ஒரு கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு உள்ளது. இங்கு இருக்கும் நாகராஜர் கோவில் பாம்பு புற்றை சுற்றி கோவில் எழுப்பி இருக்கிறார்கள்.

    நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பழம், பால் படைத்து வணங்கி செல்கின்றனர். அவரவர் வாழ்க்கையில் நினைத்த காரியங்கள் தடையின்றி நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் உள்ள புற்று மண் மிகவும் விசேஷமானது. பல சரும நோய்களை குணமாக்க வல்ல மண் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இந்த புற்றில் இருந்து மண்ணை எடுத்து அருகிலுள்ள தொட்டியில் போட்டிருக்கிறார்கள்.

    அம்பாள் சன்னதியிலும் புற்று மண் இருக்கிறது. இந்த மண்ணை சிலர் மருந்தாக சாப்பிட்டு வருகிறார்கள். நெற்றியிலும் இதை திலகமாக வைத்துக் கொள்கிறார்கள்.

    இந்த கோவில் அற்புதங்களுக்கெல்லாம் சிகரமாக விளங்குவது சங்கர நாராயண சுவாமி சிலை. காரணம் ஒரே சிலையில், ஒரு பாதி சிவனும், மறுபாதி விஷ்ணுவும் போன்ற தோற்றம் உடையது. தலையில் கங்கையை முடிந்து இருக்கிறார். ரத்ன கிரீடம் சூடியிருக்கிறார். கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கிறார். இடுப்பில் புலித்தோல் கட்டியிருக்கிறார். இவை அனைத்தும் சிவனின் வடிவங்கள்.

    மறுபாதியில் தலையில் கிரீடம், காதில் மசியக் குண்டலம், கையில் சங்கு, சிம்மகரணம், இடுப்பில் பட்டு பீதாம்பரம் இருக்கிறது. இந்த வடிவம் விஷ்ணுவின் வடிவமாகும். எனவே சிவனும், விஷ்ணுவும் சேர்ந்திருப்பதால் சங்கரநாராயண சுவாமி என்கிறார்கள்.

    ஒருமுறை பார்வதி தேவியாருக்கு சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று சந்தேகம் வந்துவிட்டது. அதை சிவனிடம் நேரடியாகவே கேட்டுவிட்டார். உடனே சிவபெருமான் பாதி சிவனாகவும், பாதி விஷ்ணுவாகவும் தோன்றினார்.

    உடனே சிவனார், பெரியவர் யார், சிறியவர் யார் என்பது பார்ப்பவர் கண்ணில் தான் உள்ளது. இரண்டு பேருமே ஒன்று தான் என்று விளக்கமும் கூறினார். இதை உணர்த்தும் விழா, சங்கரன் கோவிலில் காட்சி அளிக்கும் ஈசனை காண தேவி புறப்பட்டு வரும் வைபவமாக ஆடித்தபசு எனும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.

    அம்பாள் தவக் கோலத்தில் காணப்படுகிறார். அம்பாள் சன்னதியை சுற்றி உள்ள கிரிவீதியை 108 முறை சுற்றினால் நினைத்தது நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இத்தலத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    அதுவும் ஆடித்தபசுக்கு முன்பு சுற்ற வேண்டும். ஆடித்தபசு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நடந்தேறுகிறது.

    பொதுவாக சிவன் அபிஷேகப்பிரியர். விஷ்ணு அலங்காரப் பிரியர். ஆனால் சங்கரன்கோவிலில் இருவரும் ஒரே சிலையாக அமைந்திருப்பதால் அதற்கு அபிஷேகம் செய்வது சிரமமாக இருந்தது. இதையறிந்த ஆதிசங்கரர் தாம் வைத்திருந்த ஸ்படிகலிங்கத்தை கோவிலுக்கு கொடுத்து அதற்கு அபிஷேகம் செய்யுமாறு கூறினார்.

    இந்த லிங்கத்தை தண்ணீரில் போட்டால் லிங்கம் இருப்பதே தெரியாது. இது ஒரு இயற்கை அற்புதமாகும். அதுபோல் சங்கர நாராயண சந்நிதியில் வனக்குழி என்ற ஒரு பள்ளம் உள்ளது. இதில் சாமியை பிரதிஷ்டை செய்திருப்பதாக ஒரு ஐதீகம். எனவே பேய் மற்றும் பில்லி சூனியத்திற்கு ஆளான பலர் இந்த வனக்குழியில் அமர்ந்து பூஜை செய்வார்கள்.

    • சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது.
    • அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.

    மூலவர் - சங்கரலிங்கம்

    அம்மன் - கோமதி அம்மன்

    தல விருட்சம் - புன்னை

    தீர்த்தம் - நாகசுனை தீர்த்தம்

    ஊர் - சங்கரன்கோவில்

    மாவட்டம் - திருநெல்வேலி

    அரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பாள் பார்வதி, "கோமதி" என்னும் பெயரில் பூலோகம் வந்து தவமிருந்த இடமே சங்கரன்கோவில். சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் பக்தி கொண்டிருந்தனர். இருவருக்கும் சிவன் பெரியவரா திருமால் பெரியவரா என்ற வாதம் எழுந்தது.

    தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு காட்ட, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள். அவளுடன் தேவர்கள் பசுக்கள் வடிவில் வந்து வணங்கி வந்தனர். பசுவை ''கோ" என்பர். தவக்காலத்தில் அம்பாளின் முகம் "மதி" போல் பிரகாசித்தது. எனவே அவள் "கோமதி" எனப்பட்டாள். "ஆவுடையம்மாள்" என்றும் இவளை அழைத்தனர்.

    "ஆ" என்றால் "பசு". "பசுக்களை உடையவள்" என்று பொருள். இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர். பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கரலிங்கமாகவும் எழுந்தருளினார். திங்கள் கிழமைகளில் கோமதி அம்பாளுக்கு மலர் பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிப்பர்.

    திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுவர். அம்பாள் சந்நிதிகளில் பீடத்திற்கு அடியில் அல்லது அம்பிகையின் பாதம் முன்பு ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதை, ''ஆக்ஞா சக்ரம்" என்கின்றனர்.

    கோவில் அமைப்பு...

    சிவன், அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர், சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடியும் உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

    திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமணி மற்றும் இலட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இச்சன்னதியில் காலை பூஜையில் மட்டும் துளசிதீர்த்தம் தரப்படும்.

    மற்ற நேரங்களில் விபூதி தருகின்றனர். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள். சிவன் அபிஷேகப்பிரியர். திருமால் அலங்காரப்பிரியர். எனவே திருமாலுக்கு உகந்த வகையில் மூலவர் சங்கரநாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி தருகிறார். இவருக்கு அபிஷேகம் கிடையாது.

    இச்சன்னதியில் ஸ்படிகலிங்கமாக காட்சி தரும் சந்திரமவுலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவராத்திரி, ஏகாதசி நாட்களில் உற்சவருக்கு அபிஷேக, பூஜை நடக்கும். ஆடித்தபசு விழாவன்று மட்டும் அம்பாளுக்கு காட்சி தர இவர் வெளியேபுறப்பாடாகிறார். மனநோய், மனக்குழப்பம் உள்ளவர்கள் இதன் மேல் அமர்ந்து அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள் ஆடித்தபசு விழா, 12 நாட்கள் நடக்கும்.

    அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கரநாராயணர் இவளுக்கு காட்சி தருவார்.

    கோவில் நடை திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் - 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் - இரவு 9 மணி வரை. 

    ×