search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர்கள் பெயர் நீக்கம்"

    • தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.
    • தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி வாக்கு பதிவு நடந்தது.

    இதில் பா.ஜ.க. வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ள சில தொகுதிகளில் வாக்காளர்கள் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி கூறுகையில்:-

    சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து 20 ஆயிரம் முதல் 30,000 வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    ஒரு வாரத்திற்கு முன்பு வாக்காளர் சீட்டு பெற்றவர்கள் கூட தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தெலுங்கானாவில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் வேண்டுமென்றே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

    மேலும் வாக்காளர் பட்டியலை உருவாக்குவதில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலில் முறைகேடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தில்லுமுல்லு நடந்தது. இது குறித்து முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம்.

    இதன் அடிப்படையில் முறையீடுகள் நடந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.

    தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பல வாக்காளர்களால் வாக்களிக்க முடியவில்லை. இவ்வாறு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார்பாடி விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் அந்த விளக்கம் ஏற்கும்படியாக இல்லை என பா.ஜ.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களின் பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி கோவையில் நேற்று வாக்களிக்க முடியாத பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி, பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் 2-வது முறையாக செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 2023 அக்டோபர் 27-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 தொகுதிகளில் (பல்லடம் தவிர்த்து) 16 லட்சத்து 71 ஆயிரத்து 3 வாக்காளர்கள் இருந்தனர். இதில் புதிதாக 47 ஆயிரத்து 559 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 6,181 இறப்பு, 18 ஆயிரத்து 934 நிரந்தர குடிபெயர்வு, 3,249 இரட்டை பதிவு காரணமாக மொத்தம் 28 ஆயிரத்து 364 வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

    இந்த விவரங்களை சரிபார்த்து கருத்து தெரிவிக்க கட்சியினருக்கு நகல் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான மார்ச் 27-ந் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை (ஜனவரி 22-ந் தேதி முதல் மார்ச் 17-ந் தேதி) வரை மீண்டும் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு படிவங்கள் பெறப்பட்டன.

    மார்ச் 27-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூலூர், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய சட்டசபை தொகுதிகளில் 17 லட்சத்து 8 ஆயிரத்து 369 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 504 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இப்போது 1090 இறப்பு, 6998 நிரந்த குடிபெயர்வு, 245 இரட்டை பதிவு என 8,333 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

    திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லடம் சட்டசபை தொகுதிக்கான வாக்காளர்கள் 3 லட்சத்து 97 ஆயிரத்து 755 சேர்த்து கோவை பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பாபள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறுகையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். வீடு- வீடாகச் சென்று ஆய்வு செய்து பெயரை நீக்கியதாக ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் கூறி உள்ளனர். நீக்கப்பட்டதாக கூறப்படும் பட்டியலில் உள்ள 40-45 வாக்காளர்கள் ஓட்டளிக்க வந்ததாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். எதன் அடிப்படையில் பெயர்கள் நீக்கப்பட்டன என அறிக்கை கேட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    ×