என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Srilankan economic crisis"
- சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.
- கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களின் புரட்சி போராட்டத்தால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோத்தபய ராஜபக்சே வந்திருப்பதாகவும், தனிப்பட்ட பயணமாக அவருக்கு 14 நாட்கள் தங்கி இருக்க விசா வழங்கப்படுவதாகவும் அடைக்கலம் தரவில்லை என்றும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.
கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா காலம் கடந்த 28-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் விசாவை மேலும் 2 வாரம் அந்நாட்டு அரசு நீடித்தது.
இதன்படி சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே வருகிற 11-ந்தேதி வரை தங்கி இருக்க முடியும். அதன்பின் அவர் இலங்கை திரும்புவார் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 2 வாரம் விசாவை நீட்டித்து வழங்க சிங்கப்பூரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரில் மேலும் 14 நாட்கள் தங்கி இருக்க அனுமதிக்குமாறு இலங்கை அரசு சிங்கப்பூர் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் மேலும் சில நாட்கள் தங்கி இருப்பார் என்று தெரிவித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்க உயர் பதவிகளில் இருந்த கோத்தபய ராஜபக்சே குடும்பத்தினர் காரணம் என்று கூறி மக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைவரும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு:
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேக்கு எதிரான மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக கடந்த 13-ந்தேதி மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் அவர் மறுநாள் (14-ந்தேதி) சிங்கப்பூருக்கு சென்றார்.
அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை இ-மெயில் மூலம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார்.
இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியானது. இதை மறுத்த சிங்கப்பூர் அரசு, கோத்தபய ராஜபக்சே தனிப்பட்ட முறையில் வந்துள்ளதாகவும், அவருக்கு தங்கள் நாட்டில் தங்கியிருக்க 14 நாட்கள் விசா வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
கோத்தபய ராஜபக்சேவின் சிங்கப்பூர் விசா கடந்த 28-ந்தேதி முடிவடைந்த நிலையில் அவருக்கு மேலும் 14 நாட்கள் விசா நீட்டிப்பை சிங்கப்பூர் அரசு வழங்கியது. இதன் மூலம் அவர் வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை சிங்கப்பூரில் தங்கி இருக்க முடியும்.
இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வருகிற 11-ந்தேதி வர உள்ளதாக அரசின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய பிறகு புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பாராளுமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு ராஜபக்சேவின் கட்சி ஆதரவு அளித்தது. மேலும் அதிபர் மாளிகை முன்பு இருந்த போராட்டக்காரர்களும் ராணுவம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டனர். இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு ராணுவம், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்களின் போராட்டம் அடங்கி இருக்கும் சூழலில் கோத்தய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இனப்படுகொலை குற்றச்சாட்டில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்யுமாறு ஐ.நா. சபை அதிகாரி யாஸ்மின் சுகா விடுத்த கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்து உள்ளது.
சிங்கப்பூர் சட்டப்படி கோத்தபய ராஜபக்சே எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் அவர் மீது இலங்கை அரசும், சர்வதேச இண்டர் போல் அமைப்பும் எந்த புகாரும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
- அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது.
கொழும்பு:
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் பொதுமக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டத்தில குதித்தனர்.
அதிபர் மாளிகை அருகே பொதுமக்கள் கூடாரம் அமைத்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன் உச்சகட்டமாக கடந்த 9-ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள்.
அங்கு சில நாட்கள் தங்கியும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றவுடன் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. அதிபர் மாளிகை அருகே முகாம் அமைத்து போராட்டம் நடத்தியவர்களை ராணுவத்தினர் அங்கிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் அமைத்து இருந்த கூடாரங்களை பிரித்து எறிந்தனர்.
பின்னர் அதிபர் மாளிகையை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் மாளிகைக்குள் யாரும் நுழையாமல் இருப்பதற்காக அதனை சுற்றி ராணுவத்தினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக கடந்த 100 நாட்களுக்கு மேலாக அதிபர் மாளிகை முடங்கி கிடந்தது. மேலும் அதனை சீரமைக்கும் பணியும் மும்முரமாக நடந்தது
தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்து வருவதால் முதல் அதிபர் மாளிகை இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று அதிபர் மாளிகை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம் போல பணிகள் நடந்தது.
இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
இலங்கையில் வாரத்தில் 3 நாட்கள் பள்ளிகள் இயங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
- மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
- போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் புரட்சி போராட்டம் வெடித்ததால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றார்.
மறுநாளே அதிபர் மாளிகைக்கு உள்ளேயும், முன்பும் இருந்த போராட்டக்காரர்களை போலீசார், ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா.சபை மற்றும் பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. ரணில் விக்ரமசிங்கேவை அமெரிக்கா தூதர் சந்தித்து தனது கவலையை தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பல வெளிநாட்டு தூதர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது ரணில் விக்ரமசிங்கே கூறும் போது:-
எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்று ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை என்று கூறினார்.
அதிபர் மாளிகை முன்பு காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிபர் மாளிகை வளாகத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- இலங்கை மக்களுக்கு, 40,000 மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது.
இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து 3-ம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக் கொண்டு வி.டி.சி. சன் கப்பல் சென்றது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கித்தவித்து இன்னலுறும் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தமிழக மக்களின் சார்பில் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார். இதற்கான அனுமதிகளை மத்திய அரசிடம் கோரி பெற்றார்.
இதன் அடிப்படையில் இலங்கையில் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதை கருத்தில் கொண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதலமைச்சர் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இப்பணிக்காக ரூபாய் 177 கோடியை ஒதுக்கீடு செய்து உத்திரவிட்டார். மேலும், இத்தகைய பெரும் மனிதாபிமானப் பணியில் தமிழக மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கை மக்களுக்கான நிவாரண பணிக்கு தேவையான நன்கொடைகளை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அனைவரும் மனமுவந்து நிதி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
முதலமைச்சர் அறிவிப்பின் அடிப்படையில் இப்பொருட்களை கொள்முதல் செய்வதற்கான பணி உடனடியாக தொடங்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கை மக்கள் பயன்படுத்த கூடிய அரிசி வகைகளும் கண்டறியப்பட்டு, தமிழ்நாட்டிலுள்ள 85 அரிசி ஆலைகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது.
மேலும் பால் பவுடர், ஆவின் நிறுவனத்திடம் இருந்தும், மருந்துப் பொருட்கள், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டன. இப்பணிகள் அனைத்தும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையால் ஒருங்கிணைக்கப்பட்டு, 9075 மெட்ரிக் டன் பொருட்கள் அடங்கிய முதல் கப்பலை 18.05.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் , சென்னை துறைமுகத்தில் இருந்து, இலங்கைக்கு TAN BINH 99 என்ற கப்பலில் அனுப்பி வைத்தார்.
இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் மாதிரி தொகுப்பு இலங்கை துணை தூதரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 22.06.2022 அன்று 15,000 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய இரண்டாவது கப்பலை (VTC SUN) தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு அனுப்பி வைத்தார்கள்.
அடுத்த கட்டமாக நேற்று (23.07.2022) 16,595 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மூன்றாவது கப்பலை (VTC SUN) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சர்களும் அனுப்பி வைத்துள்ளார்கள்.
இவ்வாறு மூன்று கப்பல்களில் இதுவரை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தவாறு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 102 மெட்ரிக் டன் உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்காக கப்பல் போக்குவரத்து செலவு உட்பட 196.83 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிட்டுள்ளது. இத்தொகையில் 8.22 கோடி ரூபாய், தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த பங்களிப்புகள் மூலமாகவும் எஞ்சியுள்ள 188.61 கோடி ரூபாய் தமிழக அரசின் சொந்த நிதியில் இருந்தும் செலவிடப்பட்டுள்ளது.
அனைவரும் பாராட்டியுள்ள இந்த நடவடிக்கையால் இலங்கையில் பொது மக்களுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சூழலை, தொடர்ந்து கண்காணித்து அந்த மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் கிடைத்திட அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் தலைமையிலான இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், பிறர் துயர் கண்டு மனம் நோகும் வலிதான் அன்பு, வெறுப்புணர்வை வெறுக்கும் அறமே மனிதநேயம், அண்டை நாட்டு மக்கள் அல்லலுறும் சூழலில் அன்பும் மனிதநேயமும் கொண்டு தமிழ்நாட்டு மக்கள் ஈந்த உதவிப் பொருட்களைச் சுமந்து மூன்றாவது கப்பல் இலங்கை புறப்பட்டது. தமிழ்வழி நின்று துன்பம் துடைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.
- இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை கனிமொழி எம்.பி. கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
தூத்துக்குடி:
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி கடந்த மே மாதம் 18-ந் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 9.045 டன் அரிசி, 50 டன் ஆவின் பால்பவுடர், 8 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து 2-ம் கட்டமாக கடந்த 22-ந் தேதி ரூ. 67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் 3-ம் கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசிய பொருட்கள் இன்று காலை வி.டி.சி. சன் கப்பல் மூலம் சென்றது.
அதனை கனிமொழி எம்.பி., சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இந்த கப்பலில் ரூ. 54 கோடி மதிப்பிலான 16.356 டன் அரிசி, ரூ. 6 கோடி மதிப்பிலான 201 டன் பால்பவுடர், ரூ. 14 கோடி மதிப்பிலான 39 டன் உயிர்காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ. 74 கோடி மதிப்பில் 16.596 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
- இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
- ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. அதனால் நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.
புதிய அதிபரை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். அவருக்கு 134 வாக்குகள் கிடைத்தது. மற்ற வேட்பாளர்களான அழகபெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.
அப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கே இன்று பதவி ஏற்பார் என்று அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவர் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி அவர்களை அரசாங்க பதவிகளில் இருந்து துரத்திய நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது.
அது போல நேற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்தெடுக்கப்பட்ட போது அதிபர் மாளிகை முன்பு அவருக்கு எதிராக போராட்டஙகள் நடந்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கொழும்பில் உள்ள புத்த கோவிலில் தரிசனம் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
நீங்கள் (போராட்டக்காரர்கள்) அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தால் அது ஜனநாயகம் அல்ல, அது சட்டத்திற்கு எதிரானது. அப்படி செய்பவர்களை சட்டத்தின் படி உறுதியாக கையாள்வோம்.
அரசியல் அமைப்பில் மாற்றத்துக்காக அமைதியாக போராடும் பெரும்பான்மையினரின் எண்ணங்களை ஒரு சிறிய அளவில் உள்ள எதிர்ப்பாளர்களால் நசுக்க அனுமதிக்கமாட்டோம். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார்.
- இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாடிகன்சிட்டி:
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக கோரி பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அங்கு நிலவும் அரசியல் மற்றும் சமூக குழப்பங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பாக கவலை தெரிவித்துள்ளார். இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறி இருப்பதாவது:-
அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன். ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று இலங்கை பிஷப்புகளுடன் இணைந்து ஆட்சியாளர்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
- மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.
ஈழத் தமிழர்களை அழித்த ராஜபக்சே குடும்பத்தினர் கடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும், இனி தங்களை யாரும் தட்டி கேட்க முடியாது என்ற ஆணவத்துடன் செயல்படத் தொடங்கினார்கள்.
அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலும், தம்பி கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலும் அமர்ந்து கொண்டு ஆட்டம் போட்டனர். அவர்களது குடும்பத்தினர் மந்திரிகளாகவும், அரசின் உயர்துறைகள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அதிகார மையங்களாகவும் மாறி இருந்தனர்.
அவர்கள் செய்த தவறுகளும், சொத்து குவிப்பும் மிக விரைவில் வெட்ட வெளிச்சத்துக்கு வந்து இலங்கை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் அதிபர் கோத்தபய ராஜபக்சே மிகப்பெரிய தவறு ஒன்றை செய்தார்.
அன்னிய செலாவணி விஷயத்தில் தவறான முடிவுகளை எடுத்தார். அதோடு அரசின் அனைத்து துறைகளிலும் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு தனக்கு நம்பிக்கைக்குரிய ராணுவ அதிகாரிகளை நியமித்தார்.
ராணுவ அதிகாரிகளை அவர் மலைபோல நம்பி பல அதிகாரங்களை ஒப்படைத்தார். ஆனால் அந்த ராணுவமே அவருக்கு எதிராக திரும்பியதால் தான் ராஜபக்சே குடும்பத்தினர் இன்று நாட்டைவிட்டே ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் நாட்டில் முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அடுத்து சீனாவை முழுமையாக நம்பி மற்ற நாடுகளை பகைத்துக்கொண்டு செயல்பட்டது. அடுத்து தொலைநோக்கு பார்வையில்லாமல் கோத்தபய ராஜபக்சே எடுத்த முடிவுகள் பொருளாதாரத்தை மீட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இலங்கை தள்ளாடித் தொடங்கியது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தை பொறுத்து பார்த்த மக்கள் மார்ச் மாதம் வீதிக்கு வந்து போராடத்தொடங்கினர். மார்ச் 31-ந்தேதி கொழும்பில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது.
ஏப்ரல் 3-ந்தேதி எதிர்ப்புக்கு பயந்து ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே ராஜினாமா செய்தார். மே 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். தற்போது அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுகிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவர்கள் செய்த அட்டூழியம் பாவமாக மாறி இன்று அவர்களை நாட்டை விட்டே துரத்தியுள்ளது. இதனால்தான் கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு துரத்தப்பட்டதும், ஈழத் தமிழர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட தொடங்கிவிட்டனர்.
- இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
- அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
கொழும்பு:
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாடே மிகப்பெரிய பொருளாதார சீரழிவுகளில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்றவை சுத்தமாக இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பால், அரிசி போன்றவற்றில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டதால் மக்கள் கடும் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர்.
பொருளாதார சீரழிவால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையில் கடந்த மே மாதம் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த மே மாதம் 9-ந்தேதி இலங்கை முழுவதும் கலவரம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினார்கள். நாளுக்கு நாள் இந்த கோரிக்கையும், போராட்டமும் வலுத்தது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார். என்றாலும் ரனில் விக்கிரமசிங்கேயாலும் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை. அவரும் கடுமையாக திணறினார்.
இந்த நிலையில் அதிபர் பதவியில் மட்டும் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான கோத்தபய ராஜபக்சே இருந்து வந்தார். அவர் மீது தான் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் 2 நாட்களுக்கு யாருக்கும் எரிபொருள் கிடையாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது.
இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதை ஏற்று நேற்று காலை கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், ரெயில்களில் போராட்டக்காரர்கள் கொழும்பு வந்தனர்.
நேற்று பிற்பகல் அவர்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகை நோக்கி சென்றனர். ராணுவ வீரர்கள் அவர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால் அதையெல்லாம் முறியடித்துவிட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
அதே சமயத்தில் ஜனாதிபதி அலுவலகத்துக்குள்ளும் ஒரு பிரிவினர் புகுந்தனர். சில மணி நேரத்துக்குள் கோத்தபய ராஜபக்சேயின் வீட்டையும், அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினார்கள். அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
ராணுவத்தினர் அவர்களை விரட்டி தடியடி நடத்தினார்கள். இதில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தடியடி நடத்தப்பட்டாலும் மக்கள் கலைந்து செல்லவில்லை.
அதிபர் மாளிகையை முழுமையாக கைப்பற்றிய மக்கள் கோத்தபய ராஜபக்சேவின் படுக்கை அறை, சமையல் அறை, ஆலோசனை கூடம் ஆகியவற்றுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதிபரின் மாளிகைக்குள் உள்ள நீச்சல் குளத்தில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். கோத்தபய ராஜபக்சேவின் சொகுசு கார்களை சில இளைஞர்கள் எடுத்து ஓட்டி பார்த்தனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த இலங்கை மக்கள் அங்கேயே இருக்கப்போவதாக அறிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய மக்கள் அதிபர் மாளிகையில் இருந்து கும்மாளமிட்டனர்.
அதே சமயத்தில் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுக்க போராட்டம் நடந்தது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக கொழும்பில் போராட்டம் நடந்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பல்வேறு தெருக்களிலும் அணிவகுத்து வந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. என்றாலும், மக்கள் வரலாறு காணாத வகையில் புரட்சிகரமாக லட்சக்கணக்கில் திரண்டதால் கொழும்பில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கே வீட்டை தீ வைத்து எரித்தது போல மற்ற தலைவர்களின் வீட்டையும் பொதுமக்கள் சூறையாடிவிடக் கூடாது என்ற பயம் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்