என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
இலங்கையில் பதற்றம் நீட்டிப்பு: கொழும்பில் 2-வது நாளாக மக்கள் புரட்சி போராட்டம்
- இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
- அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன.
கொழும்பு:
இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாடே மிகப்பெரிய பொருளாதார சீரழிவுகளில் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் போன்றவை சுத்தமாக இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. பால், அரிசி போன்றவற்றில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டதால் மக்கள் கடும் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்தனர்.
பொருளாதார சீரழிவால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பட்டினி கிடக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் இலங்கையில் கடந்த மே மாதம் மிகப்பெரிய புரட்சி வெடித்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் தெருக்களில் திரண்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த மே மாதம் 9-ந்தேதி இலங்கை முழுவதும் கலவரம் வெடித்து தீப்பற்றி எரிந்தது. ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பொறுப்புகளில் இருந்து விலக வேண்டும் என்று நாட்டின் அனைத்து துறை மக்களும் கோஷம் எழுப்பினார்கள். நாளுக்கு நாள் இந்த கோரிக்கையும், போராட்டமும் வலுத்தது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவி வகித்தார். என்றாலும் ரனில் விக்கிரமசிங்கேயாலும் இலங்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியவில்லை. அவரும் கடுமையாக திணறினார்.
இந்த நிலையில் அதிபர் பதவியில் மட்டும் மகிந்த ராஜபக்சேயின் தம்பியான கோத்தபய ராஜபக்சே இருந்து வந்தார். அவர் மீது தான் மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் இலங்கையில் 2 நாட்களுக்கு யாருக்கும் எரிபொருள் கிடையாது என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியது. அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சேவை விரட்டினால்தான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று இலங்கை முழுவதும் பிரசாரம் செய்யப்பட்டது.
இலங்கை அரசு ஊழியர்கள், ராணுவத்தின் ஒரு பிரிவினர், புத்த மத குருக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் நேற்று முன்தினம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. இதை ஏற்று நேற்று காலை கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பஸ், ரெயில்களில் போராட்டக்காரர்கள் கொழும்பு வந்தனர்.
நேற்று பிற்பகல் அவர்கள் ஒன்று திரண்டு அதிபர் மாளிகை நோக்கி சென்றனர். ராணுவ வீரர்கள் அவர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை வீசினார்கள். தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஆனால் அதையெல்லாம் முறியடித்துவிட்டு மக்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர்.
அதே சமயத்தில் ஜனாதிபதி அலுவலகத்துக்குள்ளும் ஒரு பிரிவினர் புகுந்தனர். சில மணி நேரத்துக்குள் கோத்தபய ராஜபக்சேயின் வீட்டையும், அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றினார்கள். அங்கிருந்த பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன.
ராணுவத்தினர் அவர்களை விரட்டி தடியடி நடத்தினார்கள். இதில் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தடியடி நடத்தப்பட்டாலும் மக்கள் கலைந்து செல்லவில்லை.
அதிபர் மாளிகையை முழுமையாக கைப்பற்றிய மக்கள் கோத்தபய ராஜபக்சேவின் படுக்கை அறை, சமையல் அறை, ஆலோசனை கூடம் ஆகியவற்றுக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதிபரின் மாளிகைக்குள் உள்ள நீச்சல் குளத்தில் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். கோத்தபய ராஜபக்சேவின் சொகுசு கார்களை சில இளைஞர்கள் எடுத்து ஓட்டி பார்த்தனர்.
அதிபர் மாளிகைக்குள் நுழைந்த இலங்கை மக்கள் அங்கேயே இருக்கப்போவதாக அறிவித்தனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. விடிய விடிய மக்கள் அதிபர் மாளிகையில் இருந்து கும்மாளமிட்டனர்.
அதே சமயத்தில் கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் இரவு முழுக்க போராட்டம் நடந்தது. சில இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடந்தன. போராட்டக்காரர்களை போலீஸ்காரர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக கொழும்பில் போராட்டம் நடந்தது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு பல்வேறு தெருக்களிலும் அணிவகுத்து வந்து கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கோஷமிட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இலங்கையில் அரசியல் மாற்றம் செய்து பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே அதற்கேற்ப புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி உள்ளன. என்றாலும், மக்கள் வரலாறு காணாத வகையில் புரட்சிகரமாக லட்சக்கணக்கில் திரண்டதால் கொழும்பில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
ரணில் விக்கிரமசிங்கே வீட்டை தீ வைத்து எரித்தது போல மற்ற தலைவர்களின் வீட்டையும் பொதுமக்கள் சூறையாடிவிடக் கூடாது என்ற பயம் அரசியல்வாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அமைச்சர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கையில் அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்