என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Thiruparangunram"
- அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.
திருப்பரங்குன்றம்:
தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.
இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.
- கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
- 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கோவில் ஆறுகால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.
அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை ரத வீதிகள் வழியாக வடம் பிடித்து இழுத்து வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை திருப்பரங்குன்றம் மலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி கோவில் மலைமேல் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் உள்ள தாமிரக் கொப்பரையில் 300 கிலோ நெய், 150 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு திருவண்ணாமலையிலிருந்து வந்த சிறப்பு குழுவினர் மூலம் மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இதற்காக மாலை 6 மணி அளவில் கோவில் மூலஸ்தானத்தில் பாலதீபம் ஏற்றப்பட்டு, மலை மேல் மகாதீபம் ஏற்றப்படும்.
தொடர்ந்து இரவு 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கனை கொளுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமை யில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தேரோட்டம் மற்றும் கார்த்திகை மகாதீபம் ஏற்று வதை தரிசிக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தில் குவிந்துள்ளனர்.
- ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். ஐப்பசி மாதம் 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகர் சன்னதியில் உள்ள சண்முகருக்கு காப்பு கட்டப்பட்டு, உற்சவர் சுப்பிரமணியசுவாமி தெய் வானைக்கு காப்பு கட்டப்பட்டது. உற்சவ நம்பியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 9 மணிக்கு மேல் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்புகட்டப்பட்டது.
இதையொட்டி மதுரை மட்டுமல்லாது விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் வளாகம் மற்றும் சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் தங்கி கந்தசஷ்டி விரதம் தொடங்கினார்கள். விழாவினை முன்னிட்டு சண்முகர் சன்னதியில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் சண்முகார்ச்சனை நடைபெறும்.
தினமும் இரவு 7 மணிக்கு தந்த தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 17-ந் தேதி மாலை 6:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி சூரனை வதம் செய்ய கோவர்த்தன அம்பிகையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 18-ந்தேதி சூரசம்ஹார லீலை நடைபெறும். திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சூரனை சுப்பிரமணியசுவாமி வதம் செய்யும் சூரசம்காரம் நடை பெறும்.
விழாவில் நிறைவு நாளான 19-ந்தேதி சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி ரத வீதி மற்றும் கிரி விதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் அளிப்பார். அன்று மாலை பாவாடை தரிசனம் நடைபெற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமி தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
- தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தெப்பத்திருவிழாவானது ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தை கார்த்திகை அன்று தெப்பம் தள்ளுதல், தேரோட்டம் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக ஜி.எஸ்.டி.ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளுவார்.
அங்கு காலை, இரவில் தெப்ப மிதவையில் இணைக்கப்படும் வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தினை 3 முறை சுற்றி வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 22-ந் தேதி தெப்பத்திருவிழா தொடங்குகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந் தேதி தேரோட்டமும், சிகர நிகழ்ச்சியாக 31-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
- 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மலை மேல் சிக்கந்தர் தர்காவின் பின்புறம் உள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர் நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டு ள்ளது.
இதனைப் பாண்டி யநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என்று கூறப்படும் வடக்கிருந்து நோன்பு நோற்று உயிர்நீத்த இடம் என்பதைக் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அரிட்டநேமிபடாரர் நிசிதிகை இது' என்பது இக்கல்வெட்டின் பாடம். முன் இரண்டு வரிகளில் தொடக்கம் சேதம் அடைந்துள்ளதால் எத்தனை நாள் நோன்பு இருந்தார் என்பதை அறிய முடியவில்லை.
40 அல்லது 50 என்று நாட்கள் இருக்கலாம் முன்னெழுத்துக்கள் இல்லாமல் பது என்ற 2 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால் 20 முதல் 80 வரையான நாட்களை குறிக்கலாம். நிசிதிகை என்ற சொல் இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
பாண்டியநாட்டில் இந்த சொல் கல்வெட்டுகளில் இதுவரை இடம் பெற்றதி ல்லை. தொண்டைமண்டலம் (திருநாதர்குன்று) கொங்குமண்டலம் (விசயமங்கலம்) ஆகிய ஊர்களில் இப்படிப்பட்ட நிசிதிகை கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. பாண்டியநாட்டில் இதுவே முதலாவதாக அறியப்பட்டு ள்ளது.
செஞ்சிக்கு அருகில் உள்ள திருநாதர்குன்று மலையில் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த சந்திரநந்தி எனும் துறவியின் நிசிதிகை உள்ளது. அதன் காலம் கி.பி. 6-ம் நூற்றாண்டாகும்.
திருப்பரங்குன்றம் சங்ககாலத்திலேயே முக்கிய சமணத்தளமாக விளங்கியுள்ளது. மூன்று தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கி.மு. முதல்நூற்றாண்டைச் சேர்ந்தவை இங்கு காணப்படுகின்றன. அதற்கு அடுத்து கி.பி. 8,9-ம் நூற்றாண்டில் தென்பரங்குன்றம் குடைவரைக்கோவில் சமணத்தீர்த்தங்கரர்க்காக எடுக்கப்பட்டது. பின்னர் கி.பி. 13ம் நூற்றாண்டில் அது சிவன்கோவிலாக மாற்றம் பெற்றது. மதுரைக்கு அருகில் சமணம் செல்வாக்குப் பெற்றிருந்த எண்பெருங்குன்றங்களில் திருப்பரங்குன்றம் முதலாவதாகும். மலை உச்சியில் காசிவிசுவநாதர் கோயில் அருகில் மலைப்பாறையில் கி.பி. 9,–10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத்துறவியரின் உருவங்கள் செதுக்கப்பட்டு ள்ளன.
மலை அடிவாரத்தில் உள்ள பழனிஆண்டவர் கோவிலின் பின்புறம் ஒர் இயற்கையான சுனைக்கு அருகில் இரண்டு பார்ச்சுவநாதர், மகாவீரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செதுக்கி யவர்களின் பெயர்களும் கி.பி.10ஆம் நூற்றாண்டின் வட்டெழுத்தில் வெட்டப்பட்டுள்ளன.இவ்வளவு சமணத்தொடர்பு டைய திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக நோன்பிருந்து உயிர்நீத்த அரிட்டநேமிப்பெரியார் பற்றிய கல்வெட்டு கிடைத்திருப்பது முக்கி யத்துவம்வாய்ந்ததாகும். மதுரைக்கு அருகில் உள்ள அரிட்டாபட்டி என்னும் சமணத்தலம் அரிட்டநேமிப் பெரியாரின் பெயரில் அமைந்தது என்பர். இவரே அப்பெயருக்குக் காரணமானவராக இருக்கலாம்.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே வடக்கிருந்து உயிர் போக்கும் வழக்கம் இருந்தது என்பதனை கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வரலாறு கூறுகிறது. இவ்வழக்கம் 10-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது என்பதற்கு இப்போதைய திருப்ப ரங்குன்றம் கல்வெட்டு கண்டுபிடிப்பு சான்றாக அமைகிறது.
மேற்கண்ட தகவலை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்