search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train robbery"

    • பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.
    • ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    திருச்சி:

    பாதுகாப்பான பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணங்களை தேர்வு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நெடுந்தூர விரைவு தொடர்வண்டிகளிலும், 100க்கும் மேற்பட்ட மின்தொடர் வண்டிகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.

    நெடுந்தூரம் செல்பவர்கள் பஸ் பயணத்தைவிட ரெயில் பயணத்தை தான் அதிகம் விரும்புவார்கள். அதுவும் ஜன்னல் ஓரம் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி செல்வது தனி சுகம். கூட்டம் நெரிசல் இருந்தால் சிலர் படிகட்டுகள் அருகே அமர்ந்து செல்வதும் உண்டு. அவ்வாறு அமர்ந்து செல்பவர்கள் தங்களது செல்போன்களை பார்த்த படியே செல்கின்றனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் கொள்ளை கும்பல் ரெயில் பயணிகளிடம் செல்போன்கள், நகைகளை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர். இதனால் சிலர் தங்களது விலை உயர்ந்த செல்போன்களை பறிகொடுப்பதுடன் அதில் உள்ள முக்கிய ஆவணங்களையும் இழந்து தவிக்கின்றனர்.

    இது குறித்து ரெயில் பயணிகள் கூறும்போது:

    பஸ்சை விட ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று நினைத்து அதிகளவிலான பயணிகள் ரெயிலில் பயணிக்கின்றனர். ஆனால், அவர்களது நம்பிக்கையை சிதைக்கும் வகையில், சம்பவங்கள் தொடர்கின்றன.

    ரெயில் பயணிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த கும்பல் ரெயில் வந்துநிற்கும் போது ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களை குறிவைத்து அவர்கள் அருகில் வந்து நின்று கொள்கிறார்கள். ரெயில் புறப்படும் போது அவர்களின் கவனத்தை திசை திருப்பி கழுத்தில் கிடக்கும் நகைகள், கையில் வைத்திருக்கும் செல்போன்களை பறித்துக் கொண்டு ஓடிவிடுகின்றனர்.

    கடந்த 18-ந் தேதி சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக நெல்லை செல்லும் ரெயிலில், திருச்சி மாவட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணிபுரியும் முதல்நிலை காவலர் ஒருவர், திருச்சிக்கு பயணம் மேற் கொண்டார். இவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு தனது மனைவியிடம் செல்போனில் பேசிக்கொண்டு வந்தார்.

    விழுப்புரம் அருகே வந்த போது ரெயிலின் வேகம் குறைந்தது. அப்போது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கல்லால் அவரை தாக்கி செல்போனை பறிக்க முயன்றனர். இதில் காவலரின் கண், பற்கள் மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பயணிகளுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு முற்றிலும் உத்தரவாதம் கொண்டதாக இல்லை.

    இரவு நேரங்களில் இயக்கப்படும் ரெயில்களில் போதிய போலீசார் இல்லாததால், வழிப்பறி கும்பல்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

    பல ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா வசதி இல்லாததால், அதை தங்களுக்கு சாதகமாக மர்ம கும்பல் பயன்படுத்தி கொள்கிறது. இதனால், ரெயிலில் பயணிக்கவே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது.

    எனவே தமிழகத்தில் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, அரக்கோணம் ரெயில் நிலையங்கள் மற்றும் வேகம் குறைவாக செல்லும் இடங்களில் போதுமான ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு திருட்டு சம்பவங்களை தடுத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர்.

    • மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

    ஈரோடு:

    மன்னார்குடியில் இருந்து கோவை வரை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த மாதம் 29-ம் தேதி கோவையை சேர்ந்த சண்முகவேலன் என்பவர் முன்பதிவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து உள்ளார்.

    அப்போது ஈரோடு ரெயில் நிலையம் வந்த போது ரெயிலில் இருந்த சண்முகவேலின் விலை உயர்ந்த மொபைல் மற்றும் நவரத்திரன மாலை, நவரத்தின கல் மோதிரம், டிராவல் பேக் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது.

    சண்முகவேல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சண்முகவேலன் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த ஈரோடு ரெயில்வே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக மர்ம நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள வெளி பகுதியில் இருந்த பூங்காவில் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் அங்கும், இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், ராமசாமிபுரம், 2-வது தெருவை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 48) என தெரிய வந்தது.

    மேலும் ஓடும் ரெயிலில் சண்முகவேலனிடம் பொருட்களை திருடியதையும் ஒப்புக்கொண்டார். அதனை தொடர்ந்து சங்கரபாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மொபைல், நவரத்தின கற்களை உள்ளிட்ட பொருட்களை மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது சங்கரபாண்டியன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சங்கரபாண்டியன் மீது ஏற்கனவே சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகள், சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, கழுகுமலை போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகள், சிவகாசியில் 1, ராஜபாளையம் போலீஸ் நிலையத்தில் 1, தூத்துக்குடியில் 3 திருட்டு வழக்குகள், தென்காசியில் 1 திருட்டு வழக்கு என மொத்தம் 22 திருட்டு வழக்குகள் சங்கர பாண்டியன் மீது நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சங்கரபாண்டியன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×