என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Vishu Festival"
- பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில் நடை 19-ந்தேதி அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது.
சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு காய்,கனிகளை படைத்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நடந்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் சாமி முன்பு பல வகையான காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டி ருந்தன.
தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. வழிபாடுகள் முடிந்த பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனை வாங்கவும், ஐயப்பனை தரிசிக்கவும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலை சென்று விஷூ கனிகாணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்துள்ளனர்.
- குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து கனி கண்டு வழிபாடு நடத்துவார்கள்.
கேரளாவில் மாநிலம் முழுவதிலும் விஷூ பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவையொட்டி ஐஸ்வரியம் பெருகவும், செல்வம் கொழிக்கவும், கிடைத்த செல்வம் நிலைக்கவும் வேண்டி கோவில்கள், வீடுகளில் விஷூ கனி கண்டு மக்கள் கொண்டாடி மகிழ்வது வழக்கம். மக்கள் அவரவர் வீடுகளில் விஷூ பண்டிகையை கொண்டாடுவார்கள். அப்போது குடும்பத்தினர்களுக்கு வீட்டில் உள்ள முதியவர்கள் புத்தம் புதிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை கை நீட்டமாக வழங்கி மன நிறைவுடன் கொண்டாடும் ஐஸ்வர்ய விழா விஷூ பண்டிகையாகும்.
இதை முன்னிட்டு கேரளாவில் அனைத்து கோவில்களிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து விஷூ கனி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கேரள மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து குடும்பம் குடும்பமாக கோவில்களுக்கு வந்து சாமி தரிசனம் நடத்தி கனி கண்டு வழிபாடு நடத்துவார்கள். வீடுகளிலும் கிருஷ்ணனை அலங்கரத்து மலர் மாலை அணிவித்து புத்தாடை, கண்ணாடி, காய்கறி, பழங்கள், கனிக்கொன்றை பூக்களை வைத்து கனி காணும் சடங்கு நடத்தப்படும்.
சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 11-ந் தேதி திறக்கப்பட்டது. 12-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. விஷூ பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை வழக்கத்தை விட முன்னதாக அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து சாமி ஐயப்பனின் கனி காணுதலுக்கு பிறகு பக்தர்கள் காலை 7 மணி வரை கனி கண்டு தரிசனம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. விஷூ கனி தரிசனம் காண ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் குவிந்துள்ளனர். விஷூவை முன்னிட்டு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.
அதேபோல், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் விஷூ வழிபாடுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி கோவில் நடை நள்ளிரவு 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில், கரிக்ககம் சாமுண்டி தேவி
கோவில், சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் விஷூ பண்டிகை கையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
விஷூ பண்டிகையையொட்டி கனி காணலின் போது கிருஷ்ணனை அலங்கரித்து, புத்தாடை, காய்கனிகள், கனிக்கொன்றை மலர்கள், ஆபரணங்கள், ஆரன்முளா கண்ணாடி ஆகியவற்றுடன் வைத்து கேரள மக்கள் வழிபாடுகளை நடத்துவார்கள். இதையொட்டி திருவனந்தபுரம் உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் கிருஷ்ணன் விக்ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
- மணமகன் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பண்டங்களை வாங்கிக் கொடுப்பார்கள்.
- அழகாக உடை அணிந்து கம்பீரமாக ஹீரோவாக மணமகன் வலம் வருவார்.
தமிழ் புத்தாண்டான சித்திரை 1-ந் தேதி சித்திரை விசு விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அகத்தியருக்கு சிவபெருமான் பாபநாசத்தில் தனது திருமணக் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்து வருகிறது.
அதாவது, சிவபெருமானின் திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது அனைத்து தேவர்கள், ரிஷிகள், முனிவர்களும் அங்கு கூடியதால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதனால் நிலைகுலைந்த தேவர்கள் உலகை சமநிலைப்படுத்த வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினர். அவர் அகத்திய முனிவரை அழைத்து, 'நீ தென் திசைக்கு சென்று உலகை சமநிலைப்படுத்து' என்று கேட்டுக்கொண்டார்.
உடனே அகத்தியர் பணிந்து வணங்கி, "ஈஸ்வரா, தங்கள் திருமணக்கோலத்தை தரிசிக்க இந்த இடத்தில் முனிவர்களும், ரிஷிகளும் கூடி நிற்க, எனக்கு இந்த பாக்கியம் கிடையாதா?" என்று மன வேதனையுடன் கேட்டார்.
அதற்கு சிவபெருமான், "தென் திசையில் பொதிகை மலையில் நான் உனக்கு திருமண கோலத்தில் காட்சி தருவேன்" என்று சொல்லி அனுப்பினார்.
அதன்படி தென் திசை வந்த அகத்தியருக்கு சித்திரை மாதம் 1-ந் தேதி பொதிகை மலையில் சிவபெருமான், பார்வதி தேவியுடன், திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார். அப்போது வானத்திலிருந்து மஞ்சள் மழை பொழிந்தது. இந்தக் காட்சியை நினைவுபடுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பாபநாசத்தில் உள்ள பாபநாசநாதர்-உலகம்மன் கோவிலில் சித்திரை விசு திருவிழா நடைபெறும்.
இதன் சிகர நிகழ்ச்சியாக சித்திரை மாதம் 1-ந் தேதி காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். இரவில் தெப்ப உற்சவம் நடைபெறும். அதன் பின்னர் சுவாமி-அம்பாள் கோவிலுக்கு புறப்பட்டுச் சென்று, கோவிலில் பின்புறத்தில் வைத்து அகத்தியருக்கு திருமணக்கோலத்தில் காட்சி அளிப்பார்கள். திருமணம் ஆகாத ஆண், பெண்கள் இந்த திருமணக் காட்சியை கண்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
திருமணம் முடிந்த புதுமண தம்பதியர்கள் வந்து தாமிரபரணியில் தீர்த்தமாடி, சிவபெருமானை வழிபட்டு, அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய திருமண காட்சியை கண்டால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகின்ற இந்த திருமணக்காட்சியை புதிதாக திருமணமான தம்பதியர்கள் தங்கள் குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் புதிதாக திருமணமான புதுமாப்பிள்ளை-பெண்ணை, பெண் வீட்டார் 'சித்திரை தீர்த்தம்' என்று அழைக்கப்படும் இந்த சித்திரை விசு விழாவிற்கு பாபநாசம், பாபநாசநாதர் உலகம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து தாமிரபரணி நதியில் தீர்த்தமாட செய்வார்கள். அதன்பின் புதுமண தம்பதியர்கள் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு தெப்ப உற்சவம் பார்ப்பார்கள். பின்னர் அகத்தியருக்கு, சிவபெருமான் காட்சியளிக்கும் திருமணக் கோலத்தில் சிவபெருமானையும், அகத்தியரையும் வழிபட்டுச் செல்வார்கள்.
இப்படி சித்திரை விசுவுக்கு வருகின்ற புதுமாப்பிள்ளையை, மணமகளின் தந்தை மற்றும் சகோதரர்கள் அழைத்து வருவார்கள்.
இந்த விழாவில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும். புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை, பெண்ணிற்கு குடை, செருப்பு மற்றும் வீட்டிற்கு தேவையான டார்ச் லைட், சமையல் உபகரண பொருட்கள் ஆகியவற்றை வாங்கி கொடுப்பார்கள். மேலும் மாப்பிள்ளை வீட்டில் உள்ள அவருடைய பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரிகளுக்கும், அவருடைய குழந்தை களுக்கும் தேவையான தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து விருந்து வைத்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்கள்.
இதுகுறித்து முதியவர் ஒருவர் கூறியதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெரும்பாலும் வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் தான் அதிக அளவில் திருமணம் நடைபெறும். திருமணம் முடிந்தவுடன் கோவில், குளம் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
ஐப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் திருமணம் ஆன தம்பதிகள் சித்திரை விசு அன்று பாபநாசம் கோவிலுக்கு அழைத்து வந்து தீர்த்தம் ஆடி இறைவனை வழிபட்ட பின்னர் அவர்களுடைய குடும்பத்திற்கு தேவையான பொருட்களை பெண் வீட்டார் வாங்கிக் கொடுப்பார்கள்.
அந்த காலத்தில் கூட்டு குடும்பமாக இருந்ததால் குடை, டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்கள் வீட்டில் ஒன்று மட்டும் தான் இருக்கும். அதை மூத்தவர்கள் பயன்படுத்தி வருவார்கள். புதிதாக திருமணமான தம்பதியர் அதை பயன்படுத்துவதற்கு அவர்களிடம் கேட்க வேண்டும். அது மூத்த அண்ணன் மனைவி வீட்டில் இருந்து வந்ததாக இருக்கும். அவர்களிடம் கேட்பதற்கு புதிய தம்பதியருக்கு கவுரவ குறைச்சலாக தெரியும். இதனால் தான் பெண் வீட்டார் தனது மகளை கவுரவப்படுத்த வேண்டும் என்பதற்காக மணமகனுக்கு செருப்பு, குடை, டார்ச் லைட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொடுப்பார்கள்.
அதேபோல் மணமகன் வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான பண்டங்களை வாங்கிக் கொடுப்பார்கள். புது மாப்பிள்ளை அன்று தனது சொந்த செலவில் தனது மனைவியின் சகோதர, சகோதரிகளுக்கும், அவருடைய உறவினர்களுக்கும், அவர்கள் கேட்கிற பொருட்களை வாங்கிக் கொடுப்பார்.
அழகாக உடை அணிந்து மிகவும் கம்பீரமாக ஹீரோவாக அன்று வலம் வருவார். அவரிடம் அன்று எது கேட்டாலும் அவர் வாங்கிக்கொடுப்பார். அந்த அளவிற்கு இந்த விழா சீரும் சிறப்புமாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் புத்தாண்டு சுபகிருது ஆண்டு இன்று பிறந்துள்ளது.
- பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம் வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டு சுபகிருது ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள் மற்றும் வீடுகளில் இன்று விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. கோவிலில் சாமி தரிசனத்திற்கு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் காய், கனிகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.
கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர். பக்தர்களுக்கு காய், கனிகள் கை நீட்டம் வழங்கப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை கனி காணும் நிகழ்ச்சியையொட்டி பல்வேறு விதமான காய்கறிகள், இளநீர்கள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்தனர். சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமிபதியில் காலையில் நடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து வாகன பவனி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்பட்டது. வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலிலும் காய்கறிகள் பெருமாளுக்கு படைத்து வைக்கப்பட்டது. பெருமாள் கோவிலில் பக்தர்கள் காலையிலிருந்து தரிசனம் செய்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்த பக்தர்களுக்கு கை நீட்டமும், காய்கறிகளும் வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணசாமி கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிக மாக காணப்பட்டது.
குடும்ப குடும்பமாக வந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில்களில் கைநீட்டம் வழங்கப் பட்டது. வீடுகளிலும் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் உள்ள பூஜை அறைகளில் காய்கனிகள் படைத்து வைத்து பொது மக்கள் வழிபட்டனர். வீடுகளில் உள்ள பெரியவர்கள் கால்களில் விழுந்து புதுமண தம்பதியினர் மற்றும் குழந்தைகள் ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
- சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
- கோவில் நடை 19-ந்தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி நேற்று முன்தினம் மாலை கோவில் நடை திறக்கப்பட்டது.
சபரிமலையில் நடை பெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடக்கிறது. சித்திரை முதல் நாளில் இறைவன் முன்பு படைக்கப்படும் காய், கனி வகைகளை பார்த்து சாமி தரிசனம் செய்தால் அந்த ஆண்டு இனிமையாகவும், வளமையாகவும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்காக சித்திரை விஷூ நாளில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இதற்காக அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும்.
அப்போது காய்,கனிகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பூஜைகள் முடிந்த பின்னர் சாமி முன்பு படைக்கப்பட்ட காய், கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதுபோல கைநீட்டமும் அளிக்கப்படும்.
இதனை கோவில் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஆகியோர் வழங்குவார்கள். சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சிக்காக திறக்கப்படும் கோவில் நடை வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும்.
- பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.
- தமிழ் புத்தாண்டையொட்டி வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அது போல தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு கனி காணும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள முறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின்படியும் நடப்பது வழக்கம். இதனால் சித்திரை விஷு கணி காணும் நிகழ்ச்சி இந்த ஆண்டு கேரள முறைப்படி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாளை மறுநாள் தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சார்த்தப்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க குடங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு பக்தர்கள் விஷு கனி காணும் வகையில் அன்று ஒரு நாள் மட்டும் பார்வைக்கு வைக்கப்படும். தாணுமாலய சாமி சன்னதி எதிரே உள்ள செண்பகராமன் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தியின் திரு உருவம் பல வண்ண மலர்களால் வரையப்பட்டு இருக்கும். அதன் அருகே ஆள் உயர கண்ணாடி வைக்கப்பட்டு அதன் மீது தங்க ஆபரணங்கள் சூட்டப்பட்டு, காய்கனிகள் அனைத்தும் படைத்து பக்தர்கள் காணும் வகையில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன், பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படும்.
தமிழ் புத்தாண்டையொட்டி காலை மற்றும் மாலை வேளையில் வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர்கவிதா பிரியதர்ஷினி தலைமையில், கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் தாணுமாலய தொண்டர் அறக்கட்டளையினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
- 15-ந்தேதி ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும்.
- சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 27-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடந்தது. கடந்த 5-ந் தேதி ஆராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்தநிலையில், சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் (நெய் தேங்காய் ஆழியில்) தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து படி பூஜை, இரவு 10 மணிக்கு நடை அடைப்பு போன்றவை நடக்கிறது.
15-ந் தேதி விஷு பண்டிகை அன்று வழக்கம் போல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். தொடர்ந்து இரவு 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் காண அனுமதிக்கப்படுவார்கள்.
விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். தொடர்ந்து 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மலையாள புத்தாண்டு தினமான “விஷு” திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்புத்தாண்டு மக்களின் வாழ்வில் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை மலையாள மொழி பேசும் மக்களுக்கு எனது இனிய “விஷு” திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #Vishu
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்