search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 19-ந்தேதி வரை பூஜைகள் நடக்கிறது
    X

    மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி திறந்து வைத்த போது எடுத்த படம்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு: 19-ந்தேதி வரை பூஜைகள் நடக்கிறது

    • 15-ந்தேதி ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும்.
    • சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 27-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடந்தது. கடந்த 5-ந் தேதி ஆராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெற்று கோவில் நடை அடைக்கப்பட்டது.

    இந்தநிலையில், சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடந்தது. பின்னர் 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் (நெய் தேங்காய் ஆழியில்) தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், தொடர்ந்து படி பூஜை, இரவு 10 மணிக்கு நடை அடைப்பு போன்றவை நடக்கிறது.

    15-ந் தேதி விஷு பண்டிகை அன்று வழக்கம் போல் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமிக்கு விஷுக்கனி தரிசனத்திற்கு வைக்கப்படும். தொடர்ந்து இரவு 7.30 மணி வரை ஐயப்ப பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் காண அனுமதிக்கப்படுவார்கள்.

    விஷு பண்டிகையை முன்னிட்டு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள். தொடர்ந்து 19-ந் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    9 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளையொட்டி சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    Next Story
    ×