search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர்"

    • திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது.
    • தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    பல்லாவரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டுக்கு உட்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர் மற்றும் 6-வது வார்டுக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் பகுதியில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் வினியோகம் செய்த குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அந்த தண்ணீரை குடித்ததால்தான் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகிய 2 பேர் பலியானதாகவும் கூறப்பட்டது.

    மேலும் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த 2 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அவர்களது சாவுக்கான காரணம் தெரியவரும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் திருவேதி மற்றும் மோகனரங்கம் ஆகியோரது நுண்ணுயிர் பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் உயிரிழந்த 2 பேருக்கும் கிருமி பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.

    தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்ட ரசாயன பகுப்பாய்வு முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. அந்த முடிவுகள் வந்த பிறகு இவர்களது சாவுக்கான காரணம் தெரிய வரும் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் ஈ கோலி பாக்டீரியாக்கள் அதில் இல்லை என தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழக சுகாதார துறையும் காலரா ஏற்படுத்தும் கிருமிகள் அந்த தண்ணீரில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு தற்போது குடிநீர் பகிர்மான குழாய்கள் முழுவதும் குளோரின் மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 12-ந் தேதி குடிநீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகு குடிநீர் பகிர்மான குழாய்கள் மூலம் மீண்டும் குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும், அதுவரை லாரிகள் மூலம் அந்த பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறும் எனவும் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் தெரிவித்தார்.

    இந்தநிலையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தனியார் ஆய்வுகள் முடிவுகளை வெளியிட்டு, பல்லாவரத்தில் வினியோகம் செய்த குடிநீரில் ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகளவு இருந்ததாக தெரிவித்து குற்றம்சாட்டி இருந்தார்.

    இதுபற்றி தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "குடிநீரில் எந்த பாதிப்பும் இல்லை. அந்த பகுதியில் ரசாயன குடோன்கள் அதிக அளவு இருப்பதால் அதில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக" தெரிவித்தனர்.

    • மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    • பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் ஏரிக்கரை தெரு, செல்வ விநாயகர் தெரு, திருக்கழுக்குன்றம் சாலை, முதல் குறுக்கு தெரு, 2வது மற்றும் 3வது குறுக்கு தெருக்களை உள்ளடக்கிய பகுதியில், 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதிக்கு ஏரிக்கரை தெருவை ஒட்டியுள்ள தரைமட்ட கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மூலம் அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தேவையான குடிநீரை வடகடம்பாடி ஊராட்சி நிர்வாகம் தடையின்றி வழங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு உள்ள ஏரிக்கரை தெருவில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கலங்கிய நீருடன், கருப்பு துருக்கள் கலந்து குடிநீர் வந்து கொண்டிருந்தது. தற்போது 'ஃபெஞ்ஜல்' புயல் கனமழைக்கு பிறகு இது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த, குடிநீரை மக்கள் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    இதனால், அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் கேன் வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதற்கு காரணம் அங்கு உள்ள தரைமட்ட கிணறு மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் கிடப்பதால் தூசிகளும், சிற்பப்பட்டறை துகள்களும் கிணற்று நீரில் கலப்பதாக கூறப்படுகிறது.

    இந்த மாசடைந்த குடி நீரை பொதுமக்கள் பயன்படுத்தும் போது தொண்டை மற்றும் உடலில் அரிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் குடிநீர் மாசு ஏற்படுத்தும் இந்த கிணற்றை மூடி பாதுகாத்து, நீர்தேக்க தொட்டியையும் சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது,

    தொடர்ந்து இப்படி மாசடைந்த குடிநீரை குடிப்பதால் இப்பகுதி முதியவர்கள், சிறுவர்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், வாந்தி, தொண்டை தொற்று, பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலை தொடர்ந்தால் அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து, தண்ணீரை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளிக்க உள்ளோம், தற்போது பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் பலியாகி 60 பேர் பாதிக்கப்பட்ட சம்பவத்தால் இன்னும் கூடுதல் பயமாக உள்ளது என்றனர்.

    • சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
    • குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.

    தாம்பரம்:

    பல்லாவரம், காமராஜர் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன்கோவில் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, மலை மேடு பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாங்காடு பகுதியை சேர்ந்த திருவேதி(56), மோகனரங்கம் (42) ஆகியோர் இறந்தனர். இதேபோல் கண்டோண்மெண்ட் பல்லாவரம், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வரலட்சுமி (88) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர்களது இறப்புக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தண்ணீரை குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் உட்கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 31 பேர் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று காலை அவர்களில் 6 பேரின் உடல் நிலை சீரானது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். 25 பேருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொதுமக்கள் பயன் படுத்திய குடிநீரின் தன்மையை அறிய 5 இடங்களில் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வெளிவர 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.


    இதற்கிடையே பாதிப்பு ஏற்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டு பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தெருக்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் வீடு, வீடாக சுகாதார ஊழியர்கள் சென்று பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்று கணக்கெடுத்தனர்.

    குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த இடத்திலும் உடைப்பு இல்லை. மேலும் குடிநீர் வினியோகிக்க தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    உடல்நலம் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த குடிநீரின் தரத்தை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று காலை பரிசோதித்து ஆய்வு செய்தார். இதேபோல் அங்குள்ள குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரும் பரிசோதிக்கப்பட்டது. அப்போது மண்டலக்குழுத்தலைவர் ஜோசப்அண்ணாத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?
    • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், மூன்று உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன்.

    இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று திமிராகப் பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா?

    அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.

    எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

    பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி, மோகனரங்கன் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார். மேலும் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

    பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்த நிலையில் பல்லாவரம் பகுதியில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. மேலும் யாரும் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

    • உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.
    • இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை.

    * குடிநீரில் கழிவுநீர் கலந்து இருந்தால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பர். ஆனால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    * உணவுப்பொருளில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒருவர் பலியாகி உள்ளார்.

    * உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்பு மீன் சாப்பிட்டுள்ளார்கள்.

    * இந்த பகுதிகளில் தற்போது அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். சில மணி நேரத்தில் தெரிந்து விடும் என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    சென்னை தாம்பரம் 13-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த பொதுமக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லாவரம், ஆலந்தூர் பகுதிகளில் மாநகராட்சி குழாயில் வந்த குடிநீரை குடித்த 23 நபர்களுக்கு கடும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    23 பேர் உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பம்மல் பகுதியை சேர்ந்த திருவேதி (57), வரலட்சுமி 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

    இந்நிலையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆறுதல் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்த பகுதியில் உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

    ஏற்கனவே 2 பேர் பலியான நிலையில் மோகனரங்கன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    • குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது, ஆனால் இங்கு குடிநீரில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் யுரேனியம் உள்ளது.
    • பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் அபாயகரமான அளவுக்கு யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்குப் புற்றுநோய்கள், நுரையீரல் பாதிப்பு, தோல் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

    2017 இல் வெளியான உலக சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி குடிநீரில் லிட்டருக்கு 15 மைக்ரோகிராம் மேல் இருக்கக்கூடாது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மற்றும் லிட்டருக்கு 30 கிராம் வரை யுரேனியம் கலந்திருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறுகிறது.

    ஆனால் சத்தீஸ்கரில் உள்ள துர்க், ராஜ்நந்த்கான், கான்கெர், பெமேதாரா, பலோட் மற்றும் கவர்தா ஆகிய மாவட்டங்களில் இருந்து எடுக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் லிட்டருக்கு 100 மைக்ரோகிராம் அளவுக்கு அதிகமாக யுரேனியம் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியாக பலோடில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியில் லிட்டருக்கு 130 மைக்ரோகிராம் அளவுக்கு யுரேனியம் கலந்துள்ளது.

     

    மேலும் ஆறு மாவட்டங்களில் 1 லிட்டர் குடிநீரில் சராசரியாக 86 முதல் 105 மைக்ரோ கிராம் அளவுக்கு யுரேனியம் கலந்திருக்கிறது. இதனால் அந்த நீரை குடிக்கும் மக்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஆனால் இதற்கான தீர்வு குறித்து பெரிய அளவிலான விவாதமோ முன்னெடுப்போ மேற்கொள்ளப்படாதது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    சத்தீஸ்கரில் மட்டுமின்றி முன்னதாக கடந்த ஜனவரியில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஆய்வின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உட்பட 12 மாநிலங்களில் குடிநீரில் யுரேனியத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.

    • நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.
    • கிருஷ்ணா நீர் வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வினாடிக்கு 1,600 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக 2,000 கன அடியாக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    கிருஷ்ணா நீரை, நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணா திறந்து வைத்தார்.

    சென்னையின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?
    • சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது.

    மனிதர்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவை களில் ஒன்று குடிநீர். ஆனால், ஆடம்பர பாட்டில் குடிநீர் பயன்பாடு என்பது தற்போது பெருவசதி படைத்தவர்களிடையே உருவாகியுள்ளது.

    அந்த வகையில், உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் குடிநீராக, ஜப்பானில் தயாரிக்கப்படும் 'பிலிகோ ஜூவல்லரி வாட்டர்' உள்ளது.

    இதன் ஒரு லிட்டர் விலை, ஆயிரத்து 390 டாலர்கள்.

    இந்திய மதிப்பில் உத்தேசமாக ரூ.1 லட்சத்து 16 ஆயிரம்!


    அப்படி என்ன இந்த குடிநீரில் விசேஷம்?

    இது மிக மிகத் தூய்மையானது என்பதுடன், ரொம்ப ஆடம்பரமான பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த பாட்டில்கள், விலை உயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி கற்களால் ஆபரணம் போல வடிவமைக்கப்படுகின்றன.

    தங்க அலங்காரங்கள் மற்றும் சிக்கலான வடிவமைப்புகளைக் கொண்ட, உன்னிப்பாக கவனத்துடன் செய்யப்பட்ட கைவினைப்பொருளாக இந்த பாட்டில் உருவாக்கப்படுகிறது.

    இதில் நிரப்பப்படும் நீர், ஜப்பானின் கோபேயில் உள்ள இயற்கை நீரூற்றில் இருந்து பெறப்படுகிறது. இந்த தண்ணீர், மிக உயர்தரமானதாக கருப்படுகிறது.


    ஆடம்பரத்தை விரும்புவோர், அதற்காக தயங்காமல் பணத்தை அள்ளிவிடத் தயாராக இருப்போரை இந்த தண்ணீருடன், இதன் ஆடம்பர பாட்டில் அலங்காரமும் கவர்கிறது.

    இந்த பூமியில், சுத்தமான குடிநீரைப் பெறுவதே கோடிக்கணக்கான மக்களுக்கு கனவாக உள்ளது. ஆனால் சிலருக்கோ. குடிக்கும் நீருக்கு, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பணம் செலவழிக்க முடிகிறது. அதையும் கூட தங்கள் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகிறார்கள்.

    முரண்பாடுகளின் மொத்த உருவமாய் நம் உலகமே உள்ளது!

    • பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டில் உள்ள வீடுகளுக்கு கடந்த 5 நாட்களாக குடிதண்ணீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்தனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிதண்ணீர் குழாயை சீரமைத்து அதில் கழிவு நீர் கலக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

    • தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன.
    • தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் தற்போது வாந்தி, பேதியால் மருத்துவ மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலப்பதாலும், குடிநீர் சரியாக சுத்திகரிக்கப்படாமல் வழங்கப்படுவதாலும் வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

    தமிழகம் முழுவதும் இந்த பாதிப்புகள் உள்ளன. இவற்றை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, பேதியை தடுக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல், ஜிங்க் மாத்திரை ஆகியவை முகாம்களிலும், வீடுவீடாகவும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வாந்தி, பேதி ஏற்படாமல் தங்களை பாதுகாக்க பொதுமக்கள் குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அரசு மருத்துவமனைகள் வரை குடிநீரால் ஏற்படும் வாந்தி, பேதி உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய அளவில் மருந்துகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    மேலும் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்படும் குடிநீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். அவ்வாறு அருந்தினால் குடிநீரால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை பெருமளவு குறைக்க முடியும். இதுகுறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×