ராஜதந்திரத்தில் சிறந்த மிதுன ராசி யினருக்கு பிறக்கும் குரோதி வருடம் வேண்டிய வரங்களை நல்கும் தமிழ் புத்தாண்டாக அமைய நல் வாழ்த்துக்கள்.
விரயகுருவின் சஞ்சார பலன்கள்:
மிதுன ராசிக்கு 7, 10ம் அதிபதியான குரு பகவான் மே 1 ,2024 முதல் ராசிக்கு 12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தனது 5ம் பார்வையால் ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சுக ஸ்தானம் என்றால் வீடு வாகனம் மட்டும் கிடையாது. ஆரோக்கியமும் சேர்ந்தது தான் சுக ஸ்தானம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம், பணம் கொடுக்கல் வாங்கல், வம்பு, வழக்கு, ஜாமீன் போன்றவற்றில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சில கிரகங்கள் சாதகமாகவும் சில கிரகங்கள் பாதகமாகவும் உள்ளதால் சாதகங்களும், பாதகங்களும் சேர்ந்தே நடக்கும்.வீடு, வாகனம் மற்றும் தாயின் ஆரோக்கியத்திற்காக சில விரயங்களை சந்திக்க நேரும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.ஆடம்பரமான ஆடைகள், அணி மணிகள் வாங்கி மகிழ்வீர்கள். தனது 6ம் பார்வையால் ராசிக்கு 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு, உத்தியோக ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை நிலையான வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு உத்தியோகத்திற்கு இணையான உத்தியோகம் கிடைக்கும். சிலருக்கு கடன் சுமை கூடும். வேலைப்பளு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
குருவின் 9ம் பார்வை ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் பதிகிறது. எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வு தொகை, அதிர்ஷ்டப் பணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம், தேக வலிமை பெறும். உங்களை வாட்டிய எதிர்மறை சிந்தனைகளை நேர்மறை சிந்தனையாக மாற்றும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள். வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் ஏற்படலாம்.
பாக்கிய சனியின் பலன்கள்
மிதுன ராசிக்கு அஷ்டமாதிபதி மற்றும் பாக்கியாதிபதியான சனி பகவான் இந்த குரோதி வருடம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகன யோகம் என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடக்கும். தனது 3ம் பார்வையால் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்க்கிறார். புத்திசாலித்தனமாக செயல்பட்டு, திட்டமிட்டு லாபம் சம்பாதிப்பீர்கள்.
தொழிலில் சிறு தடைகள் இருந்தாலும் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவீர்கள். வேலையில் முதலாளியால், மேலதிகாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். தனது 7ம் பார்வையால் 3ம்மிடமான சகாய ஸ்தானத்தை பார்க்கிறார்.வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் சகோதர, சகோதரிகள் ஒன்று கூடி ஆனந்தம் அடையும் சந்தர்ப்பம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடையே மனக் கசப்பு, பகை விலகும். சகோதரர்களின் கெளரவக் குறைவான நடவடிக்கைகளால் ஏற்பட்ட மனஉளைச்சல் சீராகும். தொழில், உத்தியோக நிமித்தமாக சிலர் வெளியூரில் வசிக்க நேரும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஒப்பந்த அடிப்படையிலான புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். சுய ஜாதக அடிப்படையில் புதிய தொழில் முதலீடு செய்ய சரியான காலகட்டம். வெளிநாடு, வெளிமாநில பயணம் சிறப்பாகும்,தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். தனது 10ம் பார்வையால் ருண,ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார். அரசியல் பிரமுகர்கள், அரசாங்க ஊழியர்கள் வம்பு, வழக்கு, சர்ச்சைகளைத் தவிர்க்க வேண்டும். ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு கடனுக்கு பொருள் கொடுக்கக் கூடாது. வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டு உடல் நலனை பாதுகாக்க வேண்டும்.
சுகஸ்தான கேது, தொழில் ஸ்தான ராகு ராசிக்கு 4ம்மிடமான சுக ஸ்தானத்தில் கேதுவும், 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சுக ஸ்தானத்தில் நிற்கும் கேது நிறைந்த ஞானத்தை மாணவர்களுக்கு வழங்குவார். இதுவரை படிப்பில் நாட்டம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். சிரத்தையுடன் படிப்பார்கள். சுமாரான வீட்டில் வசித்தவர்கள் நல்ல வசதியான வாடகை வீட்டிற்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பும் பூமி விரும்பிய விலைக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு பூர்வீகச் சொத்து கிடைக்கும்.
சிலருக்கு புதிய நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து வாங்குவது அல்லது விற்பனையால் லாபம் உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தை பலிதமாகும். சில இளவயதினர் காதல் வயப்படுவார்கள்.அரசு வேலை முயற்சி பலிதமாகும். தந்தையால் ஏற்பட்ட சிரமங்கள், விரயங்கள் படிப்படியாக குறையும். 10ல் ஒரு பாவி நிற்பது நல்லது. இப்பொழுது 10ல் நிற்கும் பாவி ராகு வெளியுலகத்திற்கு தொழில் மூலம் உங்களை அடையாளம் காண்பிக்கப் போகிறார்.
சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். பணிச் சுமை சற்று அதிகரிக்கும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். பண வரவு சரளமாகும். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும்.
வாடகை வருமானம் தரும் சொத்துக்கள் சேரும். 10ம்மிட ராகுவால் தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். 4ம்மிடம் என்பது ஆரோக்கியத்தைக் கூறுமிடம் என்பது சிலருக்கு வயிறு தொடர்பான உடல் உபாதைகள் ஏற்படலாம்.ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தாயின் ஆரோக்கியத்தில் நிலவிய குறைபாடுகள் வைத்தியத்தில் சீராகும். தாய்வழிச் சொத்தில் நிலவிய மனக் கசப்புகள் மறையும்.
மிருகசீரிஷம் 3, 4:
செவ்வாய் பகவானின் ஆதிக்கம் பெற்ற மிருகசீரிஷம் 3, 4ம் பாதம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருடம் யோகமான பலனை பெற்றுத் தரும் தமிழ் புத்தாண்டாக அமையப்போகிறது.சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
செல்வாக்கு உயரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் இப்பொழுது நிறைவான வருமானத்துடன் நடக்கும். இழந்த கவுரவப் பதவிகள் மீண்டும் கிடைக்கும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். தந்தையால் நிம்மதியும், தொழிலுக்கு அரசின் மானியம் கிடைக்கும்.பெரியோர்களிடம் மரியாதை காட்டும் குணம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள்.
சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். வேலைப்பளு அதிகமாகும். வீடு கட்டும் பணி துரிதமாகும்.
மருமகளால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும். சிலருக்கு சகோதரருடன் தொழிலில் பிரிவினை ஏற்படும் அல்லது சகோதரரின் குடும்பத்தை பராமரிக்கும் நிலை ஏற்படும். எல்லா விதத்திலும் இந்த வருடம் மிகச் சாதகமாக அமைய தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்க மேன்மையான பலன்கள் நடக்கும்.
திருவாதிரை:
ராகுவின் ஆதிக்கம் நிறைந்த திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருடம் புதிய நம்பிக்கை பிறக்கும் தமிழ் புத்தாண்டாக இருக்கும். புதிய சிந்தனைகள், எண்ணங்கள் உதயமாகும். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறக்கும். கவனத்துடன் செயல்பட்டால் தொழில், உத்தியோகத்தில் வெற்றியடைய முடியும். குரு விரயத்தில் சஞ்சரிக்கும். காலம் என்பதால் இயன்றவரை வேலையை மாற்றம் செய்யாமல் இருப்பது புத்திசாலித்தனம். பெரிய மூலதனம் போடுவதற்கு ஏற்ற காலம் அல்ல. பூர்வீகச் சொத்தால் அனுகூலம் உண்டாகும். குடும்ப சுப செலவிற்கு எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
அலைக்கழித்த வம்பு வழக்கிலிருந்து விடுபடும் மார்க்கம் தென்படும். உடன் பிறந்தவர்களின் சந்திப்பு, அனுசரனை மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பல் சிகிச்சை நல்ல பலன் தரும். தந்தை வழி சுற்றத்தால் நற்பயன் மற்றும் உதவி கிடைக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சியால் ஆதாயம் உண்டாகும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். எதிர்ப்பு சக்தி கூடி உடல் நலம் சீராகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஸ்ரீ ராமானுஜரை வழிபட இனிய மாற்றங்கள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3:
குருவின் புனர்பூசம் 1, 2, 3 மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டில் நன்மைகள் மிகுதியாகும்.தடைபட்ட அரைகுறையாக நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும். உங்கள் மீது பதிந்த வீண் சங்கடங்கள் அவமானங்கள் பழிச் சொற்கள் நீங்கும்.
எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். தாராளமான தன வரவால் ஆடம்பரச் செலவில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். சிலருக்கு கவுரவப்பதவிகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
சிலருக்கு உயில் எழுதி வைக்க வேண்டும் என்ற சிந்தனை அதிகமாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தொழில், வேலையில் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுய சம்பாத்தியம் பெருகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். வரவு செலவு சீராக இருக்கும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். திருமணம் நடக்கும். குழந்தை பிறக்கும். உடல் நிலை சீராகும்.
4ல் கேது 10ல் ராகு இருப்பதால் வீட்டுப் பெரியவர்களின் ஆலோசனையை மதித்து நடப்பது அவசியம். சொத்துக்கள் மீதான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். ஸ்ரீ ராமர் பட்டாபிசேக படம் வைத்து வழிபட நிம்மதி நிலைக்கும்.
பெண்கள்:
பெண்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் ஆனந்தமாக இருப்பார்கள். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். குடும்பம் நலனுக்காக உங்கள் செலவுகளை குறைத்துக் கொள்வீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோகத்தால் மறைமுக வருமானம் அதிகரிக்கும்.சில பெண்களுக்கு புதிய சுய தொழில் தொடங்கும் ஆர்வம் உருவாகும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திருமண முறிவு ஏற்பட்டு பிரிந்து வாழும் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வர்.
திருமணம்:
பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் பாக்கியாதிபதி சனி பகவான் மிதுனத்திற்கு அவரவரின் வயதிற்கு ஏற்ப நடைபெற வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களை இந்த ஒரு வருடத்தில் வழங்கிவிடுவார். எனவே சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும். காதல் திருமணத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். நின்று போன திருமணம் பேச்சு வார்த்தையில் வெற்றி தரும். மறுமண முயற்சி பலிக்கும்.
பரிகாரம்:
புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசியினர் இந்த குரோதி வருடம் மதுரை மீனாட்சியம்மனை வழிபட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகத கல்லால் ஆனது. இந்த ஸ்தலத்தில் மீனாட்சியம்மன் சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்றும், இந்த தலம் பூலோக கைலாசம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மதுரை மாநகரை ஆட்சி செய்யும் மீனாட்சி அம்மன் தாயுள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை வேண்டி வணங்கினாலும், அவர்களுக்கு அதை அருளுவதோடு, சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கக் கூடியவள். இந்த கோயிலுக்கு வந்து மீனாட்சி அம்மன், சொக்கநாதரை தரிசித்தால் மன நிம்மதி ஏற்படும்.