சினிமா
‘பறந்து செல்ல வா’ பட விழாவில், மகன் லுத்புதீனுடன் நடிகர் நாசர்.
‘பறந்து செல்ல வா’ பட விழாவில், மகன் லுத்புதீனுடன் நடிகர் நாசர்.

400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன: நாசர் வேதனை

Published On 2016-12-01 11:56 IST   |   Update On 2016-12-01 11:56:00 IST
“தணிக்கை செய்யப்பட்ட நிலையில், 400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன” என்று நடிகர் சங்க தலைவர் நாசர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் லுத்புதீன், ‘பறந்து செல்ல வா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். தனபால் பத்மனாபன் டைரக்டு செய்திருக்கிறார். பி.அருமை சந்திரன் தயாரித்து இருக்கிறார். கலைப்புலி இண்டர்நேஷனல் சார்பில் எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.

விழாவில் நாசர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

“இங்கே நான் ஒரு தகப்பன் என்ற முறையிலோ அல்லது தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் என்ற முறையிலோ பேச வரவில்லை. தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொண்ட சினிமா மீது காதல் கொண்டவன் என்ற முறையில் பேசுகிறேன்.

நான், 4 படங்களை தயாரித்து இருக்கிறேன். அந்த அனுபவத்தில் பேசுகிறேன். படம் எடுப்பது சிரமமே இல்லை. பத்தாயிரத்திலும் எடுக்கலாம். பத்து லட்சத்திலும் எடுக்கலாம். பத்து கோடியிலும் எடுக்கலாம். நூறு கோடியிலும் எடுக்கலாம். எல்லா பட அதிபர்களும் படம் தயாரிப்பதை விட, வெளியிடுவதற்குத்தான் கஷ்டப்படுகிறார்கள்.

400-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்ட நிலையில், வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. இந்த சூழ்நிலையில், தாணு போன்ற தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட முன்வருவது, பெரிய விஷயம். இந்த படம் பிரச்சினை இல்லாமல் வெளிவர வேண்டும் என்று விரும்பினேன். அது நிறைவேறியதில், மகிழ்ச்சி. தற்போது உதவிக்கரம் நீட்டுபவர்கள்தான் சினிமாவுக்கு தேவை.

என் மகன் லுத்புதீனை பல நடிப்பு பட்டறைகளுக்கு அனுப்பி கடுமையான பயிற்சிகளை பெற்ற பின்தான் நடிக்க வைத்தேன். அவனுடைய வளர்ச்சிக்கு உதவுபவர்களுக்கு நன்றி.”

இவ்வாறு நாசர் பேசினார்.

விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, படத்தின் கதாநாயகன் லுத்புதீன், நகைச்சுவை நடிகர் சதீஷ், சிங்கப்பூர் நடிகை நரேல் கெங் மற்றும் படக்குழுவினரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

Similar News