சினிமா
முதல்முறையாக விஜய் சேதுபதிக்காக இணையும் இளையராஜா குடும்பம்
வித்தியாசமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கும் ‘மாமனிதன்’ படத்திற்க்காக இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதல்முறையாக இணைகின்றனர். #Maamanidhan #VijaySethupathi #YuvanShankarRaja
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள் ஏவல்' படத்தை இயக்கியிருந்தார். சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகாமால் உள்ளது.
இதையடுத்து விஜய் சேதுபதி - தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ருஷ்டி டாங்கேவை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அப்படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி - சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் இணைந்திருக்கின்றனர்.
தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக யுவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இளையராஜா குடும்பத்தில் உள்ள இசையமைப்பாளர்கள் மூன்று பேரும் ஒரே படத்திற்கு இசையமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Maamanidhan #VijaySethupathi #YuvanShankarRaja