சினிமா செய்திகள்

கேள்வி ஞானம் இருந்தால் சினிமா துறையில் சாதிக்கலாம்-பாக்யராஜ்

Published On 2025-01-05 04:54 GMT   |   Update On 2025-01-05 04:54 GMT
  • குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் குறும்பட விழா நடைபெற்றது.
  • பெரும்பாலானோர் குறும்படங்கள் மூலம் தான் திரைப்பட இயக்குனராகி வருகின்றனர்.

குன்னூர்:

குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 2 நாள் குறும்பட விழா நடைபெற்றது.

இதில் 84 குறும்படங்கள் திரையிடப்பட்டன. நிறைவு நாளான நேற்று சிறந்த படங்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது. இதில் 10 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் முதல் 3 இடங்களை பிடித்த ஆதிகுடி, துணை, கூட்டத்தில் ஒருவன் ஆகிய குறும்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விழாவில் நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இயக்குநர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார். மேலும் 15 குறும்படங்களுக்கு ஆறுதல் பரிசுகளையும் வழங்கினார்.

சினிமாவை கண்டுபிடித்தவருக்கும், நான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தவர், எனக்கு ஊக்கம் அளித்த ஆசிரியர்களுக்கு நன்றி.

தோல்வியை கண்டு யாரும் பயப்படக்கூடாது. தோல்வி தான் நமது வெற்றிக்கு முதல் படி. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாததால் உலகில் என்ன நடக்கிறது எனக் கூட தெரியாத நிலை இருந்தது. விமானம் மேலே பறந்தால் அதிசயமாக பார்ப்பார்கள்.

நாளடைவில் டூரிங் டாக்கீஸ் குத்தகைக்கு எடுத்து படங்களை திரையிட்ட பின்னர்தான் இதுதான் உலகம் என தெரிந்து கொண்டனர். இதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம்.

கோபி செட்டிபாளையத்தில் முதன்முறையாக கேமராவை எடுத்துக் கொண்டு போன ஒரே நபர் நான் தான். அதன்பின்னர் ராசியான ஊர் என்பதால் அங்கு அதிகளவில் படப்பிடிப்புகள் நடந்தது.

நான் முன் அனுபவமே இல்லாமல் கதை எழுதி சினிமாவில் கால் பதித்தேன். அதற்கு கேள்வி ஞானம் இருந்தால் போதும். கேள்வி ஞானம் இருந்தாலே சினிமா துறையில் சாதிக்கலாம்.

தற்போது உள்ள இளைஞர்கள் சினிமா வாய்ப்பு கேட்டு எங்கும் அலைய வேண்டாம். குறும்படங்கள் எடுத்து அதனை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு அனுப்பி வைத்து, அவர்களுக்கு ஏற்றார் போல்படம் இருந்தது என்றால் உடனடியாக வாய்ப்பு கிடைக்கும்.

இன்று பெரும்பாலானோர் குறும்படங்கள் மூலம் தான் திரைப்பட இயக்குனராகி வருகின்றனர். சினிமாவில் புதிய தொழில்நுட்பம் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் இளைஞர்களும் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News