திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி மன்சூர் அலிகான் வழக்கு
- நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையாக வெடித்தது.
- மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க்குப்பதிவு செய்யப்பட்டது.
நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதற்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மன்சூர் அலிகான் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இதனால் பெண்களை இழிவுப்படுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே மன்சூர் அலிகான் தன்னுடைய கருத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். நடிகை திரிஷாவும் மன்னித்ததாக தெரிவித்தார்.
இந்த நிலையில் நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் மான நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மூவரும் தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ரூ.3 கோடி வழங்க உத்தரவிட வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மன்சூர் அலிகான் தாக்கல் செய்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டாம்- திரிஷா
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கடிதம் அனுப்பினர். இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியது.
இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டதால் அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை திரிஷா தெரிவித்திருந்தார். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
திரிஷாவுக்கு ஆதரவாக சிரஞ்சீவி கருத்து
"நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.
இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என சிரஞ்சீவி குறிப்பிட்டிருந்தார்.