சினிமா செய்திகள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. நாளை நடைபெறும் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

Published On 2025-03-02 13:50 IST   |   Update On 2025-03-02 13:50:00 IST
  • கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்க உள்ளார்.
  • 'எமிலியா பெரெஸ்' 13 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் உலகளவில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கும் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் நாளை காலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சிகள் இன்றிரவு தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்க உள்ளார்.

ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ஸ்பானிஷ் மொழி திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' 13 பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக பிரிவுகளில் தேர்வான ஆங்கிலம் மொழி அல்லாத திரைப்படம் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து 'புரூட்டலிஸ்ட்' என்ற ஆங்கில திரைப்படம் 11 பிரிவுகளில் தேர்வாகி உள்ளது.

இதுமட்டுமின்றி, 'விக்கட்' 10 பிரிவுகளிலும், கான்கிளேவ், எ கம்ப்ளிட் அன்னோன் ஆகிய படங்கள் 9 பிரிவுகளில் தேர்வாகியுள்ளன. இதில், எமிலியா பெரெஸ், விக்கட், டியூன் 2, தி புரூட்டலிஸ்ட் ஆகிய படங்கள் சிறந்த திரைப்படம், இயக்கம், நடிகர், நடிகை பிரிவுகளில் தேர்வாகி உள்ளன. இதனால் இந்த திரைப்படங்களுக்கு இடையே கடும் போட்டி நிகழும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த 'அனுஜா' என்ற குறும்படம் சிறந்த குறும்படம் என்ற பிரிவில் தேர்வாகி உள்ளது.

இந்திய ரசிகர்கள் ஆஸ்கர்ஸ் 2025 நிகழ்ச்சியை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஸ்டார் மூவிஸ் அல்லது ஸ்டார் மூவிஸ் செலக்ட் தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


Tags:    

Similar News