லாரி மீது கார் மோதி மலையாள நடிகர் மரணம்.. மிமிக்கிரி கலைஞர்கள் 3 பேர் படுகாயம்
- மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞரான சுதிர் இன்று விபத்தில் மரணமடைந்தார்.
- இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த சுதிர், மலையாள திரைப்பட நடிகர் மற்றும் மிமிக்கிரி கலைஞர் ஆவார். இவரும் இவரது நண்பர்களும் வடகரா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அங்கிருந்து இன்று அதிகாலை ஒரு காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களின் கார் கைப்பமங்கலம் பகுதியில் வந்த போது எதிரே வந்த சரக்கு லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த நடிகர் சுதிர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் இருந்த மிமிக்கிரி கலைஞர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தெரிய வந்ததும் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான நடிகர் சுதிர், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான காந்தாரி படம் மூலம் அறிமுகமானார். அதன்பின்பு கட்டபனையில் ரித்விக்ரோஷன், குட்ட நாடன் மார்பாப்பா, எஸ்கேப், ஸ்வர்கத்தில் காட்டெறும்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.