நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொந்தரவு.. படத் தயாரிப்பாளர் கைது
- தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை அமலா பால்.
- இவர் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அமலாபாலும், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அமலாபால்.
அமலாபால்
இந்நிலையில் நடிகை அமலாபால் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் 11 பக்கம் கொண்ட புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், பவ்நீந்தர்சிங்தத் தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாகவும், தாங்கள் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வளைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டுவதாகவும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் தன்னை துன்புறுத்தியதாக அமலாபால் குற்றஞ்சாட்டி உள்ளார். பவ்நீந்தர் சிங்குடன் இணைந்து திரைப்பட நிறுவனம் தொடங்கி நடத்தி வந்ததாகவும் புகார் மனுவில் அமலாபால் குறிப்பிட்டு உள்ளார்.
அமலாபால் - பவ்நீந்தர்சிங்தத்
நடிகை அமலா பாலின் புகார் மனுவின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் பவ்நீந்தர்சிங்தத் மீது 16 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். நடிகை அமலாபால் மீது பவ்நீந்தர்சிங்தத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அது விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.