மாதவன் பட நடிகையின் இயக்கத்தில் யஷ்
- நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
- யஷ் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கே.ஜி.எப்' படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் பிரபலமானவர் யஷ். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்த நடிகர் யஷ்ஷின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
நடிகர் யஷ்ஷின் 19-வது படத்தை இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில், சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்திற்கு 'டாக்ஸிக்' (TOXIC) என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இப்படம் 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கீது மோகன்தாஸ், தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான 'பொம்முக்குட்டி அம்மாவுக்கு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். அதுமட்டுமல்லாமல், மாதவன் நடித்த 'நள தமயந்தி' படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் 2019-ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.