null
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து- மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
- காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், இன்று "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஏராளமானோர் இசை கச்சேரியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி விபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்தது.
அதன்படி, "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும் என்றும் இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
சென்னை 28 டிசம்பர் 2024 (இன்று) மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "விஜய் ஆண்டனி 3.0 - லைவ் இன் கச்சேரி, எதிர்பாராத சூழ்நிலைகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிகழ்ச்சிக்கான மெட்ரோ பயண டிக்கெட்டுகளை ரசிகர்கள் இன்று பயன்படுத்த முடியாது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி மட்டுமே கிடைக்கும்.
M/s Noise & Grains Private Limited மூலம் மேற்கொண்டு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.