ஆன்மிகம்

கிறிஸ்துமஸ் குடிலின் சிறப்பம்சம்

Published On 2017-12-23 12:29 IST   |   Update On 2017-12-23 12:29:00 IST
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், இல்லங்களில் ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதேபோன்று கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள் மற்றும் இல்லங்கள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். ஏசு கிறிஸ்து பிறந்த போது எந்த மாதிரியான சூழல் இருந்ததோ அதை அப்படி நம் கண்முன் கொண்டுவரும் வகையில் தத்ரூபமான மனித உருவங்கள், தொழுவத்தின் வடிவம் போன்றவை அழகுற அமைக்கப்படுகிறது. 

இந்த கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது என்பது இத்தாலி, மால்டா மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்துமஸ் அலங்காரத்தின் முக்கிய பங்காக விளங்குகிறது. இத்தாலியில் உள்ள நாப்லிஸ் நகரத்தில் தான் 1020-களில் முதல்முறையாக கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது என்பது ஆரம்பித்திருக்கிறது. இதன் பின்னரே உலகெங்கும் கிறிஸ்துமஸ் குடில் ஏற்படுத்தும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

பெத்லகேமை நினைவூட்டும் கிறிஸ்துமஸ் குடில்

பெத்லகேமில் இயேசு கிறிஸ்து பிறக்கும் போது இருந்த சூழலை அது போலவே தத்ரூபமாக சிறுசிறு மனித உருவங்கள், ஆடுகள், ஒட்டகம், புல் ஓலை குடில் அமைப்பு என அனைத்தும் அழகுற வடிவமைக்கப்படும். இவற்றில் வைக்கப்பட வேண்டிய பொருட்களும் குறைவான விலையில் ஆரம்பித்து விலை அதிகமான அளவிலும் கிடைக்கின்றன. 

இவற்றை தனித்தனியே வாங்கி நாமே வீட்டின் முன் கிறிஸ்துமஸ் தொடங்கும் முன்னரே ஏற்படுத்தி விட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அதே மனித உருவங்களை கொண்டு சற்று மாறுபட்ட வித்தியாசமான அமைப்பிலும் அழகிய கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்தி கொள்ளலாம். நாமே அழகுற வைக்கோல், காய்ந்த புல், களிமண், காகித அலங்கார பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி சிறப்புற குடிலை ஏற்படுத்தி விடலாம்.



கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்த வீட்டின் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அதில் பாறை அமைப்புகள், குடிசை அமைப்பு, செடிகள், வண்ண மின் விளக்குகள் கொண்டு அலங்கரித்திட வேண்டியதுதான். தற்போது கிறிஸ்துமஸ் குடிலை அழகுற ஏற்படுத்தி அலங்கரித்து தர தனிப்பட்ட நிறுவனங்கள் கூட உள்ளன. அவை நமக்கு ஏற்ற பட்ஜெட்டில் பல வித்தியாசமான வடிவமைப்புடன் கூடிய கிறிஸ்துமஸ் குடிலை ஏற்படுத்தி தருகின்றன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துமஸ் குடில் மிக முக்கிய பங்கு வகிப்பதால் இடவசதி இல்லாதோர் பெரிய கிறிஸ்துமஸ் குடில் வரைபடங்களை கூட மாட்டி வைத்து அதில் வண்ண விளக்கு அலங்காரம் செய்து கொள்ளலாம்.

குழந்தைகளின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தின் ஊடே அவர்கள் கைவண்ணத்தில் ஐஸ்கிரீம் குச்சியில் குடில், வைக்கோல் குடில், களிமண் குடில், மரக்குடில் என பலவற்றை செய்து அசத்தலாம்.

உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில்

கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை கண்டறிந்த இத்தாலி நாட்டில்தான் உயிரோட்டமான நாடக பாணியிலான கிறிஸ்துமஸ் குடில் நிகழ்வு நடத்தப்பட்டன. இதில் மேரிமாதா, ஏசு கிறிஸ்து, ஞானிகள், விலங்குகள், நடைபெறும் இடம் என அனைத்தும் உயிரோட்டத்துடன் அமையப்பெற்று நாடகம் போல் நடத்தப்படும்.

இத்தாலியன் நேப்பல் நகரம் தான் உலகின் மிகப்பெரிய உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சியை நிகழ்த்தி காட்டியது. சுமார் 162 நாட்கள், 80 விலங்குகள், தேவதைகள், 450க்கு மேற்பட்ட சிறு உருவங்கள் என்றவாறு இணைத்து உயிரோட்டமான கிறிஸ்துமஸ் குடில் காட்சி அரங்கேற்றப்பட்டன. புனித பிரான்ஸிஸ் அசிசி என்பவர் தான் உயிரோட்டமான மற்றும் கிறிஸ்துமஸ் குடில் நிகழ்வுகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவராக திகழ்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த கிறிஸ்துமஸ் குடில் காட்சியை தேவாலயங்களும், கிறிஸ்துவ இல்லங்களும் ஆண்டுக்கு ஆண்டு புதிய உத்வேகத்துடன் கூடுதல் பொலிவுடன் அரங்கேற்றுகின்றன.

Similar News