ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சங்கடங்களை தீர்க்கும் சுதர்சன அஷ்டகம்...
- பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம்.
- வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள்.
பெருமாளின் ஆயுதங்களில் பிரதானமானது சுதர்சனச் சக்கரம். அதை வைணவர்கள் சக்கரத்தாழ்வார் என்று போற்றுகிறார்கள். பக்தர்களுக்குத் துயர் ஏற்படுகிற காலத்தில் ஓடிவந்து நம்மைக் காத்து அருள்பவர் அவரே. 13-ம் நூற்றாண்டில் காஞ்சிபுரம் அருகே உள்ள கிராமமான திருப்புட்குழி கிராமத்தில் விஷ ஜுரம் வந்தது. நிறைய மக்கள் அதனால் மடிந்தார்கள்.
அப்போது வாழ்ந்த மகான் வேதாந்த தேசிகர் அந்த ஜுரம் நீங்குமாறு சுதர்சனாழ்வாரை வேண்டிக்கொண்டு ஸ்தோத்திரம் ஒன்றைச் செய்தார். அதைப் பாடி வேண்டியதும் அந்த ஜுரம் விலகி ஓடியது என்று கூறுவார்கள். அந்த மகிமை மிகு அஷ்டகத்தை ஏகாதசி நாளில் பாடினாலோ, கேட்டாலோ சகல நன்மைகளும் கிடைக்கும்.
தற்போது நம்மை அச்சுறுத்தும் இந்த நிலையில் இருந்து மீண்டு எழுந்துவர நமக்குத் தேவை இறைவனின் அருளும் மன வலிமையும். அதை நமக்கு அருள சுதர்சன அஷ்டகம் பாடி நாம் சக்கரத்தாழ்வாரை வேண்டிக்கொள்வோம்.
விரத முறைகள்
ஏகாதசி அன்று உபவாசம் இருப்பது உத்தமம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், இந்த நாள் முழுவதும் விஷ்ணு சகஸ்ரநாமம் அல்லது ஆழ்வார் பாசுரங்கள் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள் பெருமாளின் நாமம் ஒன்றினை உச்சரித்துக் கொண்டேயிருக்கலாம். '
ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா... ஜய ஜய ஸ்ரீ சுதர்சனா' என்று 108 முறை சொல்லித் துதிக்க மன வலிமையும் ஆரோக்கியமும் மேம்படும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.