முக்கிய விரதங்கள்

கந்தசஷ்டி விழா: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள்

Published On 2022-10-27 05:33 GMT   |   Update On 2022-10-27 05:33 GMT
  • தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டுமே காண முடியும்.
  • 31-ந்தேதி மகாஅபிஷேகம் நடக்கிறது.

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான விழா நேற்று கந்தசஷ்டி உற்சவம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதை தொடர்ந்து 1-ந்தேதி வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30-ந்தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கோவிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி வழியாக சென்று, சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திப்பில் முதல் கஜமுகா சூரனை வதம் செய்கிறார். பின்னர் தெப்பக்குளம் வீதி வழியாக சென்று வெங்கட்ரமணன் வீதி சந்திக்கும் இடத்தில் 2-வதாக சிங்கமுகா சூரனையும், 3-வதாக வெங்கட்ரமணன் வீதி, ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் பாலுகோபன் சூரனையும் வதம் செய்கிறார். பின்னர் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலை திடலில் 4-வதாக சூரபத்மன் சூரனை வதம் செய்து விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்தடைகிறார்.

31-ந்தேதி காலை 10 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், 1-ந்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி நேற்று முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் விரதம் இருப்பார்கள். சூரசம்ஹாரம் முடிந்ததும் வாழைத்தண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகள், தயிர், கருவேப்பிலை, கொத்துமல்லிதழை ஆகியவற்றை கொண்டு பிரசாதம் தயார் செய்து சுப்பிரமணிய சுவாமிக்கு படைத்து விரதத்தை முடிப்பார்கள். தண்டு விரதம் இருக்கும் பழக்கம் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மட்டும் காண முடியும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News