ஆன்மிகம்

சாமிதோப்பு வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி

Published On 2016-06-04 09:20 IST   |   Update On 2016-06-04 09:20:00 IST
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் கலிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 8-ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், 5 மணிக்கு திருநடை திறப்பும், 6 மணிக்கு அய்யாவுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பணி விடையும் நடந்தது.

மாலை 5 மணிக்கு அய்யா கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வீற்றிருந்து தலைமைப்பதியின் முன்பிருந்து கலிவேட்டைக்கு புறப்படும் வாகன பவனி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு பூஜிதகுரு சுவாமி தலைமை தாங்கினார். தங்கபாண்டியன், ராஜசேகர், பையன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைப்பாகை, காவி உடை அணிந்த அய்யாவழி பக்தர்களின் அய்யா சிவ சிவா அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்திற்கிடையே வாகன பவனி புறப்பட்டது. தலைமைப்பதி மற்றும் நான்கு ரத வீதிகளை சுற்றி வந்த வாகன பவனி இரவு 7 மணிக்கு முத்திரி கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் குதிரை வாகனம் செட்டிவிளை, கோட்டையடி புதூர், சாஸ்தான் கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய ஊர்வழியாக இரவு 12 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதியை சென்றடைந்தது. அங்கு அய்யா பக்தர்களுக்கு தவக்கோல காட்சி அளித்தார்.

வாகனம் சென்ற கிராமங்களில் அந்த பகுதி மக்கள் அய்யாவுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர் ஆகிய பொருட்களுடன் சுருள் படைத்து வழிபாடு செய்தனர். வாகன ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடந்தது. வாகன பவனி மற்றும் கலிவேட்டை நிகழ்ச்சியில் பல மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தலைமைப்பதியில் பள்ளியறை பணிவிடைகளை பாலபையன், பையன் காமராஜ், பையன், அஜித் ஆகியோர் செய்திருந்தனர். 6-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு 11-ம் திருநாள் தேரோட்டம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், அன்னதர்மம், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

Similar News