ஆன்மிகம்
இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

இதிகாசங்களில் வரும் புராண கதாபாத்திரங்கள்

Published On 2019-07-18 14:19 IST   |   Update On 2019-07-18 14:19:00 IST
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் படைப்புகளை பற்றி இந்தப் பகுதியில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
யது

யயாதி, சுக்ராச்சாரியாரின் மகளான தேவயானியை திருமணம் செய்தான். அவர்களுக்குப் பிறந்த மூத்த மகன் தான் யது. இவனது வழித்தோன்றல்களே யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது மகாபாரதக் கதை. யயாதி, தன் மனைவியான தேவயானிக்கு துரோகம் செய்தான். அதனால் கோபம் கொண்ட சுக்ராச்சாரியார், அவனை முதுமை அடைந்து போகும்படி சபித்தார். பின்னர் “உன்னுடைய மகன்களில் யாராவது அவர்களது இளமையைத் தந்தால், நீ இளமையாகவே இருக்கலாம்” என்று விமோசனமும் கூறினார். இதையடுத்து யயாதி தனது மகன்கள் ஒவ்வொருவரிடமும் தனக்கு இளமையைத் தரும்படி வேண்டினான். கடைசி மகனான புரு, தன்னுடைய இளமையை தந்தைக்குக் கொடுத்தான். தனக்கு இளமையைத் தராத மூத்த மகன் யதுவுக்கும், நாட்டை ஆளும் தகுதியைத் தர மறுத்து விட்டான், யயாதி. இதைஅடுத்து யது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆடு-மாடு மேய்த்தும் பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்தும் வாழ்ந்து வந்தனர். யதுவின் வழித்தோன்றலில் வந்தவரே கிருஷ்ணர் ஆவார்.

விருத்திராசூரன்

துவஷ்டாவின் மகன் விசுவரூபன். இவனை, தற்காலிக தேவ குருவாக நியமனம் செய்தான் இந்திரன். ஆனால் யாகத்தின் போது வழங்கப்படும் ஆஹுதிகளை தேவர்களுக்கு வழங்குவதைப் போல, தன் இனமான தைத்ரிய குலத்தினருக்கும் விசுவரூபன் வழங்கினான். இதை அறிந்து ஆத்திரம் கொண்ட இந்திரன், விசுவரூபனை கொன்றான். தன் மகனைக் கொன்றதால் கோபம் கொண்ட துவஷ்டா, யாகம் ஒன்றைச் செய்து அதில் இருந்து ஒரு மகனைப் பெற்றான். அவனே விருத்திராசூரன். அவன் அசுர குல குருவான சுக்ராச்சாரியாரிடம் கல்வி கற்றதோடு, கடும் தவம் புரிந்து பிரம்மனிடம் இருந்து வரம் பெற்றான். “உலகில் அனைவராலும் அறியப்பட்ட எந்த ஆயுதத்தாலும் எனக்கு அழிவு வரக்கூடாது” என்பது அவன் பெற்ற வரம்.

அவனுக்கு கிடைத்த வரத்தால் சக்தி அதிகரித்து, இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றினான். ஐராவதம் யானையையும் தனதாக்கிக் கொண்டான். இதனால் இந்திரன், மகாவிஷ்ணு விடம் சென்று தேவலோகத்தை காத்தருளும்படி வேண்டினான். உடனே விஷ்ணு, “ததீசி முனிவரின் முதுகெலும்பில் செய்யப்படும் ஆயுதமே, விருத்திராசூரனை அழிக்கும்” என்று உபாயம் கூறினார். இதையடுத்து ததீசி முனிவரின் அனுமதியோடு, அவரது முதுகெலும்பு கொண்டு ஒரு ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே இந்திரனின் ஆயுதமாக விளங்கும் ‘வச்சிராயுதம்.’ அந்த ஆயுதத்தைக் கொண்டு விருத்திரா சூரனை அழித்து, மீண்டும் தேவலோகத்தை கைப்பற்றினான் இந்திரன்.

வியாசர்

இவர் மகாபாரதத்தை எழுதியவர். பராசர முனிவருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் பிறந்தவர். பின்னாளில் சத்யவதியை சாந்தனு என்ற மன்னன் மணம் செய்து கொண்டான். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவருமே இறந்து போனார்கள். இதனால் அஸ்தினாபுர அரசை வழிநடத்த வாரிசு இல்லாமல் போனது. இதனால் சத்யவதி தனது மூத்த மகனான வியாசரை அழைத்து வந்து, தன்னுடைய மருமகள்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டாள். அதன்படி அந்த இரு பெண்களுக்கும், பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர்களே திருதிராஷ்டிரர், பாண்டு, விதுரர். இவர்களில் திருதிராஷ்டிரருக்கு பிறந்த பிள்ளைகள் ‘கவுரவர்கள்’ என்றும், பாண்டுவுக்கு பிறந்த பிள்ளைகள் ‘பாண்டவர்கள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.



மகாபாரதக் கதையை, தான் சொல்லச் சொல்ல வேகமாக எழுது வதற்கு ஒருவரைத் தேடினார் வியாசர். இறுதியில் விநாயகப் பெருமானை அதற்காக நியமித்தார். வியாசர் சொல்லச் சொல்ல, விநாயகர் எழுதிய புராணமே ‘மகாபாரதம்’ ஆகும். வியாசர், வேதங்களை தொகுத்து வழங்கியவர். எனவே அவர் ‘வேதவியாசர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

விஸ்வரூபம்

விஷ்ணு பரமாத்மாவின், எங்கும் நிறைந்திருக்கும் வடிவம்தான் பிரமாண்டமான பேருருவமான ‘விஸ்வரூபம்.’ பிரபஞ்சத்தை காக்கும் கடவுளான விஷ்ணு, எங்கும் நிறைந்திருக்கிறார் என்பதையே இந்த விஸ்வரூப வடிவம் நமக்கு உணர்த்துகிறது. மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்தபோது, 4 முறை தன்னுடைய விஸ்வரூப காட்சியை காட்டியருளினார். அந்த நான்கு முறையில் சகாதேவன், துரியோதனன், அர்ச்சுனன், கர்ணன் ஆகியோர் அந்த காட்சியைக் காணும் பேறுபெற்றனர்.

“கிருஷ்ணா.. உன்னைக் கட்டிப்போட்டால் குருசேத்திரப் போர் நிகழாது” என்று சொன்ன சகாதேவனின் முன்பாக, விஸ்வரூபம் எடுத்து நின்றார், கிருஷ்ணர். அனைத்து உலகிலும் வியாபித்திருந்த அந்த வடிவத்தை, தன்னுடைய பக்தியால் கட்டிப் போட்டான் சகா தேவன்.

பாண்டவர்களுக்காக துரியோதனனிடம் தூது சென்றார் கண்ணபிரான். அப்போது குழி தோண்டி அதன் மேல் வைக்கப்பட்டிருந்த இருக்கையில் கண்ணனை அமர வைத்தான், துரியோதனன். அதனால் கீழே விழுந்த கண்ணன், விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

குருசேத்திரப் போர் தொடங்கிவிட்டது. ஆனால் எதிரில் நிற்பவர்கள் அனைவரும் தன்னுடைய சொந்தங்கள் என்பதால், அவர்களோடு போரிடத் தயங்கினான் அர்ச்சுனன். அப்போது கீதையை உபதேசம் செய்த கிருஷ்ணர், அவனுக்கு தன்னுடைய விஸ்வரூப காட்சியையும் காட்டினார்.

கர்ணனுக்கும், அர்ச்சுனனுக்குமான யுத்தம் உச்சத்தை எட்டியிருந்தது. கண்ணனின் சூழ்ச்சியால் அர்ச்சுனன் வீசிய அம்பு, கர்ணனின் மார்பை துளைத்திருந்தது. ஆனாலும் அவனது உயிர் போகவில்லை. அவன் செய்த தான, தருமங்கள் அவனது உயிரை காத்து நின்றது. எனவே அந்தண வடிவம் எடுத்த கிருஷ்ணன், கர்ணனின் புண்ணியங்களை தானமாகப் பெற்றார். அப்போது கர்ணனுக்கு தன்னுடைய விஸ்வரூபத்தை காட்டியருளினார்.

Similar News