ஆன்மிகம்
கோரக்கர் சித்தர்

உருவத்தை வெளிப்படுத்திய கோரக்கர் சித்தர்

Published On 2020-01-31 14:21 IST   |   Update On 2020-01-31 14:21:00 IST
வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் அவரது உண்மையான படம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் அந்த படத்தில் முக்கிய மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள் உள்ளன. அந்த ஓலைச்சுவடி தகவல்கள் மூலம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது. கோரக்கர் சித்தர் பற்றியும் இந்த நூலகத்தின் வாயிலாக பல தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகத்தின் துப்புரவு செய்யும் பணி நடந்தது. அப்போது ஒரு பெரிய சுவடி கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக அந்த கட்டு பிரிக்கப்படாததுபோல காணப்பட்டது. அதை சரஸ்வதி மகால் நூலக அதிகாரிகள் அவிழ்த்து பார்த்தனர்.

அப்போது அந்த கட்டுக்குள் உயிரினங்களின் தோல்கள் இருந்தன. அந்த தோல்களில் பல பாடல்கள் காணப்பட்டன. அவை அனைத்தும் கோரக்கர் சித்தர் எழுதிய பாடல்கள் என்பது தெரியவந்தது. ஒரு தோலில் நிறை புள்ளிகளாக மட்டும் இருந்தது. சிறுசிறு துவாரமாக இருந்த அந்த புள்ளிகள் என்னவென்று அதிகாரிகளுக்கு புரியாத புதிராக தோன்றியது.

அந்த தோலை விரித்து புள்ளிகளின் மீது பவுடரை தூவி விட்டு தோலை அகற்றி பார்த்தபோது அதில், ஒரு சித்தரின் உருவம் காட்சி அளித்தது. அது கோரக்கர் சித்தர் உருவம் என்பது பிறகு நடந்த ஆய்வில் தெரியவந்தது.

10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் தங்களது உருவத்தை எந்த இடத்திலும் வெளிப்படுத்தவில்லை. சில சித்தர்களின் உருவங்கள் ஆலயங்களில் சிற்பங்களாக உள்ளன. நாளடைவில் அந்த சிற்பங்களும் மக்களால் மறக்கப்பட்டு விட்டன.

ஆனால் கோரக்கர் சித்தர் வித்தியாசமாக தோலில் துளையிட்டு மக்களுக்கு தெரியும்படி செய்துள்ளார். அந்த வகையில் 18 சித்தர்களில் உண்மையான உருவத்தை நாம் பார்ப்பது கோரக்க சித்தரிடம் மட்டுமே.

வடக்கு பொய்கைநல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் அவரது உண்மையான படம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் அந்த படத்தில் முக்கிய மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு வழிபாட்டுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

Similar News