வழிபாடு
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவில்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா 21-ந்தேதி நடக்கிறது

Published On 2022-03-04 10:39 IST   |   Update On 2022-03-04 14:13:00 IST
சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருப்பாம்புரம் கிராமத்தில் சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படும் இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகும். முன்னொரு காலத்தில் ஆதிசேஷன், தான் பெற்ற சாபத்தால் உடல் நலிவுற்று ஈசனிடம் வேண்டியபோது, ஈசன், ‘மகா சிவராத்திரி அன்று முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், 2-வது காலத்தில் திருநாகேஸ்வரம் திருநாகேஸ்வரரையும், 3-வது காலத்தில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரரையும், 4-வது காலத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கினால் சாபம் நீங்கும்’ என்று அருளினார்.

அதன்படி ஆதிசேஷன் இந்த 4 கோவில்களிலும் வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகுவும் -கேதுவும் ஒரே ரூபமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றார்கள் என்பது தலவரலாறு. இக்கோவிலில் அஷ்டநாகங்கள் மற்றும் அகலிகை, சுனிதன் போன்ற வடநாட்டு அரசர்களும் இறைவனை வழிபட்டதாக கூறப்படுகிறது.

வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) மதியம் 3.13 மணிக்கு ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆவதையொட்டி திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு -கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.

இதையொட்டி ராகு- கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் ஆவர்.

ராகு-கேது பெயர்ச்சி விழாவில் வெளிநாடு மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவியரசு, தக்கார் சீனிவாசன், மேலாளர் வள்ளிகந்தன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

Similar News