வழிபாடு

இன்று ஆனி திருமஞ்சனம்: நலம் தரும் நடராஜர் தரிசனம்

Published On 2022-07-06 11:42 IST   |   Update On 2022-07-06 11:42:00 IST
  • கலைகளைக் கற்று, உலகமெங்கும் புகழ்பெற விரும்புபவர்கள், வழிபட வேண்டிய தெய்வம் நடராஜர்.
  • நடராஜரை வழிபட சிறந்த மாதம், ஆனி மாதமாகும்.

நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை 'தில்லைக்கூத்தன்', 'ஆடலரசன்', 'கூத்தபிரான்' என்ற பெயர்களிலும் அழைப்பார்கள். கலைகளைக் கற்று, உலகமெங்கும் புகழ்பெற விரும்புபவர்கள், வழிபட வேண்டிய தெய்வம் நடராஜப் பெருமான். சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப்பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார்.

முயலகனை வதம் செய்த கோலத்தோடு அருளும் இந்த நடராஜர் தரிசனத்தை நாம் ஆலயங்கள் செல்லும் போதெல்லாம் கண்டு தரிசிக்க வேண்டும். நடராஜரை வழிபட சிறந்த மாதம், ஆனி மாதமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் அன்று, நடராஜருக்கு ஆனி திருமஞ்சனம் நடைபெறும். அப்போது நடராஜரை வழிபட்டால் நலம் யாவும் இல்லம் வந்து சேரும்.

நாம் ஓடி ஆடி சம்பாதிக்கும் இந்த வாழ்க்கை, மற்றவர்கள் வியக்கும் அளவுக்கு அமைய, ஆனி மாத நடராஜர் வழிபாடு வழிகாட்டுகிறது. மிதுன ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம், ஆனி மாதமாகும். மிதுனம், நவக் கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறார். எனவே மாணவா்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற, இந்த ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் திருவிழாவில் கலந்துகொள்ளலாம்.

சிவராத்திரியன்று இரவு முழுவதும் விழித்திருந்து, சிவாலயங்களுக்குச் சென்று சிவபுராணம் பாடி ஈசனை வழிபடுவோம். ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரிசனத்தைக் கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதமிருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் காண்பதோடு, நடராஜர் சன்னிதியில் சிவபுராணமும் பாட வேண்டும். 'திருவாசகத்திற்கு உருகார், ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்பது பழமொழி. அந்த அடிப்படையில் நாம் இறைவன் முன்பாக திருவாசகம் பாடினால், அவர் கரிசனத்தோடு நமக்கு அருள் செய்வார்.

நாம் வாழ்வாங்கு வாழ, வாழ்வை வெல்ல, வெற்றிகளைக் குவிக்க, சிவன் திருவடியை போற்றி வணங்க வேண்டும் என்கிறார், மாணிக்கவாசகர். அல்லல் பிறவியறுப்பவனை, சொல்லற்கு அரியானை, தில்லையுள் கூத்தானை, தென்பாண்டி நாட்டானை ஆனி உத்திரத்தன்று வழிபட்டால் தேனினும் இனிய வாழ்க்கை அமையும். மனிதப் பிறவி எடுத்ததன் பயனே, இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான். அந்த இறைவன் தரிசனம் தரும் ஆனி திருமஞ்சன நாளில் (6-7-2022) நாம் உள்ளன்போடு வழிபட்டு, நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

Tags:    

Similar News