வழிபாடு

ராட்சத ஆலமரத்தின் விழுதுகளில் வேண்டுதலுக்காக காசு முடிந்த துணிகளை கட்டியுள்ள காட்சி.

25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த காட்டு காளியம்மன் திருவிழா: மரத்தில் காசு துணிகட்டி வழிபாடு

Published On 2023-06-29 14:31 IST   |   Update On 2023-06-29 14:31:00 IST
  • கடந்த 25 ஆண்டுகளாக இந்த கோவில்களில் திருவிழா நடத்தவில்லை.
  • 100 ஆடுகள் காட்டு காளியம்மனுக்கு பலியிடப்பட்டன.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 84 மலை கிராமங்கள் உள்ளன. பீஞ்ச மந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு சுயம்பாக உள்ள பெருமாள் வடிவில் புற்று, காட்டு காளியம்மனை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.

பல்வேறு காரணங்களால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த கோவில்களில் பொதுமக்கள் திருவிழா நடத்தவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் புற்றுவடிவிலான பெருமாள் கோவிலில் திருவிழா கொண்டாடினர் .

அப்போது காட்டுக்காளி அம்மன் கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு காப்பு கட்டி கொண்டனர். இதற்காக கிராம மக்கள் விரதம் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் கட்டியாப்பட்டு கிராமத்தில் காட்டுக் காளியம்மன் கோவில் திருவிழா நேற்று நடந்தது.

அவர்கள் மலையில் உள்ள மூங்கில் மரம் ஒன்றை அம்மனாக வழிபட்டு வருகின்றனர். அந்த மூங்கில் மரத்திற்கு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்தனர்.

கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இந்த திருவிழாவில் வெளியூர்காரர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கிராம எல்லையில் வெளியூர்க்காரர்கள் வருவதை தடுக்க காவலுக்கு இருந்தனர்.

மேலும் அங்குள்ள ஆலமர விழுதில் குழந்தை வரம் வேண்டியும் திருமணம் நடக்க வேண்டிய ஒவ்வொரு குடும்பத்தினர் காசு முடிந்த துணிகளை கட்டி வேண்டிக்கொண்டனர்.

தொடர்ந்து ஒரு வீட்டுக்கு 2 ஆடுகள் என மொத்தம் 100 ஆடுகள் காட்டு காளியம்மனுக்கு பலியிடப்பட்டன.

திருவிழா முடிந்த பிறகு வெளியூரில் உள்ள உறவினர்களை வரவழைத்து ஆட்டுக்கறி விருந்து அளித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் ஆடுகளை பலியிடுவதால் நாட்டில் பஞ்சம் பட்டினி நோய் நொடியின்றி மக்கள் நலமுடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

காட்டு கோவில் திருவிழாவில் வெளியூர் ஆட்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது. அதனை மீறி யாராவது கலந்து கொண்டால் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்துவிடும்.

இதனால் நாங்கள் திருவிழா நடைபெறும் நேரத்தில் காவலுக்கு இருக்கிறோம். திருவிழா முடிந்து மறுநாள் வெளியூர்க்காரர்கள் உறவினர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வீடு தோறும் கறி விருந்து பரிமாறப்படுகிறது என்றனர்.

Tags:    

Similar News