பாவம் போக்கும் அண்ணாமலை திருப்பாதம்
- அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது.
- பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது ஆன்றோர் வாக்கு. அதைப்போன்றே இறைவனின் திருப்பாத தரிசனம் நமது முற்பிறவி பாவங்களை எல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம். திருஅண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் பாதம் அமைந்துள்ளது. கோயிலுக்கு உள்ளே கோபுரத்துக்கு வலது புறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது.
அடி முடி காணாத பரம் பொருளின் பாத தரிசனம் காண வேண்டி அடியார்களும், அருளாளர்களும் மேற்கொண்ட கடும் தவத்தின் பயனாக விஸ்வரூப மூர்த்தியாக அண்ணாமலையார் எழுந்தருளிய இடத்தில் அமைந்துள்ளதே திருப்பாதம். அண்ணாமலையார் பாதம் தனி சன்னதியாக அமைந்துள்ளது. கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் தவறாமல் பாத தரிசனம் செய்வது நன்மை தரும்.
பாத தரிசன சன்னதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பாதத்தை சுற்றியுள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர், சக்திதேவியின் திருவடிவங்கள் காட்சி தருகின்றன. மேலும் மலை உச்சியிலும் அண்ணாமலையாரின் திருப்பாதம் அமைந்திருக்கிறது. தீபம் ஏற்றப்படும் மலை உச்சியின் வலது புறத்தில் பாத தரிசனத்தை நாம் காணலாம். திருவண்ணாமலையை தரிசித்து தவமிருந்து பேறு பெற்ற சித்தர்கள், மகான்கள், அருளாளர்கள் ஏராளம்.
அவர்களில் இடைக்காட்டு சித்தர், அருணகிரிநாதர், ஈசான்ய ஞானதேசிகர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், ரமணமகரிஷி, தெய்வசிகாமணி தேசிகர், விருப்பாட்சிமுனிவர், சேஷாத்ரி சுவாமிகள், இசக்கிசாமியார், விசிறி சாமியார், அம்மணியம்மன், கணபதி சாஸ்திரி, சடைசாமிகள், தண்டபாணி சுவாமி, கண்ணாடி சாமியார், சடைச்சி அம்மாள், பத்ராசல சுவாமி, சைவ எல்லப்பநாவலர், பாணி பத்தர் உள்ளிட்டவர்கள் முக்கியமானவர்கள்.