
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் திரளான பக்தர்கள் வழிபாடு
- நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் சனி பரிகார தலமாக குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் பக்தர்கள் வருகை தந்தாலும் சனிப்பெயர்ச்சி நாட்களில் அதிக அளவு வருகை தருவார்கள். மேலும் ஆடி மாத சனிக்கிழமை, 18-ம் பெருக்கு உள்ளிட்ட நாட்களில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருநள்ளாறு உள்பட முக்கிய கோவில்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடு இன்று நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டு வருகின்றனர்.
அதன்படி சனிப்பெயர்ச்சி மற்றும் அமாவாசையை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபட்டு எள் தீபம் ஏற்றி பரிகார பூஜைகளை செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு ஊர்களில் இருந்து சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
இதேபோல் திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் நவக்கிரக சன்னதி, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலிலும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.