திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதி உலா
- அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும்.
- இன்று பிடாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவிற்கு முன்பு காவல் தெய்வ வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று மாலை திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகளுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தார். அப்போது அம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கோவில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
அப்போது அம்மனுக்கு சாதம், காய்கறிகள், வடை, பாயாசம் படைத்து பூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வருவார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணத்தினால் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்ற சாமி உலா இந்த ஆண்டு மாடவீதியில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.