வழிபாடு

மலை மாதேஸ்வரா கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-02-22 11:42 IST   |   Update On 2023-02-22 11:42:00 IST
  • 101 பெண்கள் உற்சவ மூர்த்திக்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
  • வழியெங்கிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ளது மலை மாதேஸ்வரா கோவில். ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று இந்த கோவில் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை (நேற்று) வரை 5 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் இறுதி நாளில் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர் ஊர்வலம் சிவராந்திரியையொட்டிதான் நடைபெறும். அதன்படி நேற்று மலை மாதேஸ்வரன் கோவில் தேர் திருவிழா நடந்தது.

முன்னதாக காலை 8.34 மணிக்கு சுப வேளையில் தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் உற்சவ மூர்த்தியை வைத்து பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து தேரோட்டம் நடந்தது. அப்போது 101 பெண்கள் உற்சவ மூர்த்திக்கு ஆராத்தி எடுத்து வரவேற்றனர். மேலும் பக்தர்கள் 'உக்கே உகே மதப்பா''உக்கே உகே மதப்பா''உக்கே மைக்காரா' என்று கோஷமிட்டப்படி தேரை இழுத்து சென்றனர். வழியெங்கிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த தேரோட்டம் முன்னதாக கோவில் யானை, பல்லக்கு உற்சவம், வெள்ளை யானை, தெய்வானை உற்சவம், பசவ-புலி தேர், ருத்ராக்சி ஊர்வலம் ஆகியவை நடந்தது. இறுதியாக உற்சவ மூர்த்தி தேர் ஊர்வலமாக வந்தது. இந்த தேர் இறுதியாக கோவிலை வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் சாளூர் மடத்தின் பீடாதிபதி சாந்த மல்லிகார்ஜூன சாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மலை மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், இந்த தேர் திருவிழாவில் கர்நாடகத்தின் பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டத்தால் மலை மாதேஸ்வரன் கோவில் நிரம்பி வழிந்தது.

இந்த திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தால், அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு சிறப்பு வாகன வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இதனால் மாநிலத்தில் பல பகுதிகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News