மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-9)
- நம் பெருமானை போற்றிப் பாடலாம். எழுந்திடுவாய்!
- மாயக்காரன், மாதவன், வைகுந்தன் நாமங்கள் கூறியேனும் அவளை எழுப்பி விடுங்கள்.
திருப்பாவை
பாடல்:
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாழ் திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
தூய மணிகளால் செய்யப்பட்ட மாளிகையில் நாற்புறமும் விளக்குகள் எரிய, அகில் போன்ற புகை மணம் இனிது கமழ துயில்வதற்கேற்ற படுக்கையில் உறங்கும் பெண்ணே! மணிகள் பொருத்தப்பட்ட கதவைத் திறவாய்! மாமி ! உங்கள் மகள் ஊமையா? செவிடா? மிகுந்த சோம்பேறியா? யாராவது மந்திரம் போட்டு அவளை எப்போதும் உறங்கச் செய்து விட்டார்களா? பெரும் மாயக்காரன், மாதவன், வைகுந்தன் என்று நாமங்கள் பலவற்றைக் கூறியேனும் அவளை எழுப்பி விடுங்கள்
திருவெம்பாவை
பாடல்:
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்;
அன்னவரே எங்கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
காலத்தால் முற்பட்ட எல்லாப் பழமையான பொருட்களுக்கும் முன்பு தோன்றிய பழமையான பொருளே! பின்னால் வரப்போகிற புதுமைகளுக்கு எல்லாம் புதுமையாக விளங்கும் பெருமை பெற்றவனே; உன்னை இறைவனாகப் பெற்றுள்ள உன்னுடைய தொண்டர்களின் பாதங்களை வணங்குவோம்; அவ்வடியவர்களின் மனம் குளிர நடந்துகொள்வோம்; அப்படிப்பட்டவர்களையே எங்கள் கணவராகக் கொள்வோம். அவர்கள் சொல்வதையே மனமுவந்து செய்வோம். இத்தகைய இறைவன் அருளை பாடித் தொழுதால் வேறு என்ன குறை நமக்கு இருக்கப்போகிறது? அந்த நம் பெருமானை போற்றிப் பாடலாம். எழுந்திடுவாய்!