கரட்டுமேடு முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் நடக்கிறது
- ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
- உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு பகுதியில் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் 20-ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு புனிதநீர் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு துர்க்கை அம்மன், செல்வ விநாயகர், வன்னீஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு முளைப்பாலிகை, மங்கள சீர்வரிசை கொண்டுவருதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பும், இரவு 7.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து ஊஞ்சல் சேவை மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு உற்சவர் பள்ளியறைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள், நிர்வாக அறங்காவலர்கள், பரிபாலன சபை, விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.