வழிபாடு

கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2023-04-06 11:04 IST   |   Update On 2023-04-06 11:04:00 IST
  • 13-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
  • 14-ந்தேதி தீர்த்தவாரி, தெப்ப உற்சவம் நடக்கிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் உலகாம்பிகை அம்மன் உடனுறை பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைமுன்னிட்டு காலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை, மாலை ஏகசிம்மாசனம், கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், வெட்டுங்குதிரை, காமதேனு, பூம்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெறும்.

13-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் தேரோட்டம், 14-ந் தேதி பகல் 1 மணிக்கு தீர்த்தவாரி, இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், 15-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகஸ்திய முனிவருக்கு காட்சியளித்தல் நடைபெறுகிறது.

விழாவின் 6-ம் நாள் முதல் 9-ம் நாள் வரை விக்கிரமசிங்கபுரம், திருவாவடுதுறை ஆதீனம், தேவாரப் பாடசாலை மாணவர்களின் தேவார பாராயணம் மற்றும் விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றது.

திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News