வழிபாடு

ஒற்றைக்காலில் முருகனை தரிசித்த சேவல்- பக்தர்கள் பரவசம்

Published On 2025-02-07 11:25 IST   |   Update On 2025-02-07 11:25:00 IST
  • சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.
  • புகைப்படம் எடுத்த போதும் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் நின்றது.

போடி:

தேனி மாவட்டம் போடியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு சஷ்டி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

மேலும் பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

இக்கோவிலில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது திடீரென கோவிலுக்குள் சேவல் ஒன்று பறந்து வந்தது.

அந்த சேவல் யாரும் எதிர்பாராத வகையில் கொடிமரம் அருகே சென்றது. பின்னர் கொடிமரத்துக்கும், பலி பீடத்துக்கும் இடையே ஒற்றைக்காலில் ஏறி நின்றது. பக்தர்கள் அனைவரும் முருகப்பெருமானை கைகூப்பி வணங்குவது போல சேவல் ஒற்றைக்காலை தூக்கியபடி சுமார் 1 மணி நேரம் அதே இடத்தில் நின்றது.

இதைப் பார்த்த பக்தர்கள் பரவசமடைந்ததுடன் முருகனுக்கு அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பக்தர்கள் கோஷம் எழுப்பியபோதும் தன்னை புகைப்படம் எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் சேவல் அதே இடத்தில் ஒற்றைக்காலில் முருகப்பெருமானை வழிபடுவது போல நின்றது.

தமிழ் கடவுளான முருகனுக்கு சேவற்கொடியோன் என்ற பெயர் உண்டு. அவருடைய கொடியில் சேவல் சின்னம் இடம் பெற்றிருக்கும். இதன் காரணமாகவே தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானுக்கு சேவலை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

அதன்படி பக்தர் காணிக்கையாக செலுத்திய சேவல் ஒற்றைக்காலில் நின்று கிருத்திகை நாளில் முருகப்பெருமானை மனமுருக வழிபட்ட சம்பவம் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News