சமயபுரம் மாரியம்மனை வேண்டிமண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
- மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி கிராமத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனை வேண்டி மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.
இவர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செம்பளக்குறிச்சியில் நடைபெற்றது. முன்னதாக, பழைய கருமாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு, கோவில் பூசாரி பெருமாள் சக்தி கரகத்தை தலையில் சுமந்து வந்தார்.
மேளதாளத்துடன் அவருடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள் கருமாரியம்மன் கோவிலை சென்றடைந்தனர். பின்பு, அங்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, கருமாரியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காட்சியளித்து, ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. அதன் பிறகு, சமயபுரம் பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.