வழிபாடு

பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த காட்சி.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2023-05-06 06:37 GMT   |   Update On 2023-05-06 06:37 GMT
  • நாளை வீதிஉலா மற்றும் தீர்த்தவாரி நடக்கிறது.
  • 8-ந்தேதி யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

இக்கோவிலில் தைப்பூசம், ஆவணி, மாசி, சித்திரை உள்ளிட்ட மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதில் 11 நாட்கள் நடைபெறும் சித்திரை பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, விழா நாட்களில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இடும்பன், பூத, ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக வள்ளி-தேவசேனாவுடன் சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர், சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. என பக்தி கோஷம் எட்டுத்திக்கும் ஒலிக்க தேரை வடம் பிடித்தனர்.

மேலும், கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ.செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும், சுவாமிமலை பேரூராட்சி சார்பில் விழாவை காண வரும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நாளை 7-ம் தேதி நடராஜர்-சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், வீதிஉலா மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 8-ந்தேதி விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News