திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
- தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
- பெண்கள் மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட கழனிவாசல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி பெருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கியது. அதனைத்தொடர்ந்து வில் வளைப்பு, அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், கர்ணமோட்சம் போன்ற சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. துரியோதனன் படுகளம் ஆகியவை நடந்தன. பின்னர் கடலாடி ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் முழங்க பச்சைக்காளி, பவளகாளி ஆட்டத்துடன் சக்தி கரகம், பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பெண்கள் மாவிளக்கு போட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.