கடலூர் பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
- இன்று தர்மர் பட்டாபிஷேகமும், சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது.
கடலூர் பழைய வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தீமிதி உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீமிதி உற்சவம் கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலை 6.30 மணி அளவில் சக்தி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து இரவு 7 மணி அளவில், விரதமிருந்த திரளான பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிஅளவில் பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் மாலை 6 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகமும், மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7 மணியளவில் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.